/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழில்துறையினரை பழனிசாமி சந்திக்கிறார்
/
தொழில்துறையினரை பழனிசாமி சந்திக்கிறார்
ADDED : ஆக 04, 2025 10:09 PM

திருப்பூர்; அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., இணைந்த பிறகு, சட்டசபை தேர்தல் பணி வேகமெடுத்துள்ளது. கூட்டணி பேச்சு ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், கட்சி தொண்டர்களை சந்தித்து தேர்தலுக்கு தயார்படுத்தும் வகையில், பொதுசெயலாளர் பழனிசாமி, 'மக்களை காப்போம்... தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் மக்களை சந்தித்து வருகிறார்.
மூன்று கட்ட பயணம் நிறைவு பெற்று, நான்காவது கட்ட பயண அட்டவணையும் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கு, செப்., முதல் வாரத்தில் பயணம் வருவது உறுதியாகிவிட்டது. தேர்தலுக்கு முந்தைய பிரசார பயணத்தையே, மாநாடு போல் மாற்றி காண்பிக்க, கட்சியினர் களமிறங்கியுள்ளனர்.
ஒவ்வொரு 2கி.மீ., இடைவெளியில், கட்சியின் சார்பு அணிகள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர். மகளிர் அணியும், இளைஞர் பாசறையும், சீருடை அணிந்து பங்கேற்கின்றனர்.
திருப்பூர் பயணம், திருப்புமுனையாக அமைய வேண்டும் என்பதால், பனியன் தொழில் பின்னடைவு, மின் கட்டண உயர்வு, அபரிமிதமான சொத்துவரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு குறித்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிடவும் முன்னேற்பாடு நடந்து வருகிறது.
கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், 'திருப்பூர் வரும், அ.தி.மு.க., பொதுசெயலாளர் பழனிசாமி திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு, பனியன் தொழில்துறையினர் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளையும் சந்தித்து பேச திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது.
அதற்காகவே, பகுதி வாரியாக தயாரிப்பு கூட்டங்கள் நடத்தி, சட்டசபை தொகுதி வாரியாக, பிரசார பயணத்தை எழுச்சியுடன் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது,' என்றனர்.

