/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடம் ரிங் ரோடு பணி; வாகனங்கள் கணக்கெடுப்பு
/
பல்லடம் ரிங் ரோடு பணி; வாகனங்கள் கணக்கெடுப்பு
ADDED : ஜூலை 16, 2025 11:24 PM

பல்லடம்; பல்லடத்தில் ஏற்பட்டு வரும் அபரிமிதமான வாகன போக்குவரத்து நெரிசல் என்பது, வாகன ஓட்டிகளுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. போக்குவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், வெள்ளகோவில் துவங்கி- காரணம்பேட்டை வரை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இருப்பினும், போக்கு வரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.
இதனால், செட்டிபாளையம் ரோடு, சின்னியகவுண்டம்பாளையம் முதல் -தாராபுரம் ரோடு, ஆலுாத்துப்பாளையம் பிரிவு வரை, 7.5 கி.மீ., துாரம் ரிங் ரோடு அமைக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, 52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நில எடுப்பு பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. மற்றொருபுறம், காளிவேலம்பட்டி பிரிவு முதல் மாதப்பூர் வரை ரிங் ரோடு அமைக்க தேசிய நெடுஞ்சாலையும் களத்தில் இறங்கியுள்ளது. முதல் கட்ட பணியாக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே, தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் குறித்த கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வரும் வாகனங்கள் மற்றும் பல்லடத்தில் இருந்து கோவை நோக்கிச் செல்லும் வாகனங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
புதிதாக அமையுள்ள ரிங் ரோட்டினால், வாகன போக்குவரத்து நெரிசல் எந்த அளவு குறையக்கூடும் என்பது குறித்து அறிந்து கொள்ள இந்த தரவுகள் பயன்படும் என, நெடுஞ்சாலைத்துறையினர் கூறினர்.

