/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடம் மாநில நெடுஞ்சாலையை விரிவாக்கும்... திட்டம் என்னாச்சு? பல ஆண்டுகளாகியும் நிதி ஒதுக்காமல் இழுபறி
/
பல்லடம் மாநில நெடுஞ்சாலையை விரிவாக்கும்... திட்டம் என்னாச்சு? பல ஆண்டுகளாகியும் நிதி ஒதுக்காமல் இழுபறி
பல்லடம் மாநில நெடுஞ்சாலையை விரிவாக்கும்... திட்டம் என்னாச்சு? பல ஆண்டுகளாகியும் நிதி ஒதுக்காமல் இழுபறி
பல்லடம் மாநில நெடுஞ்சாலையை விரிவாக்கும்... திட்டம் என்னாச்சு? பல ஆண்டுகளாகியும் நிதி ஒதுக்காமல் இழுபறி
ADDED : டிச 09, 2024 08:28 AM

உடுமலை: உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் சந்திப்பு மேம்பாட்டு திட்டத்துக்கான கருத்துரு சமர்ப்பித்து பல ஆண்டுகளாகியும் அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால், பல்வேறு பாதிப்புகள் தொடர்கதையாக உள்ளது.
உடுமலை- - பல்லடம் மாநில நெடுஞ்சாலை, 48 கி.மீ., தொலைவுடையதாகும். நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால் இந்த ரோடு பராமரிக்கப்பட்டு வருகிறது.
கனரகம் உள்ளிட்ட போக்குவரத்து மிகுந்த இந்த நெடுஞ்சாலை, மிகவும் குறுகலாக முன் இருந்தது.
திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு, உடுமலை இணைக்கப்பட்ட பிறகு, இந்த ரோட்டை விரிவுபடுத்த, வலியுறுத்தப்பட்டது. அதன்படி, குறுகலாக ரோடு, இரு வழித்தடமாக விரிவுபடுத்தப்பட்டது; பெரியபட்டியில், உப்பாறு ஓடையின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டது.
இந்த வழித்தடத்தில் தற்போது பின்னலாடை சார்ந்த பல்வேறு தொழிற்சாலைகள் புதிதாக துவக்கப்பட்டுள்ளது. மேலும், கேத்தனுார், குடிமங்கலம் உள்ளிட்ட இடங்களில், மின் உற்பத்திக்கான காற்றாலைகள் அதிகளவு நிறுவப்பட்டுள்ளது.
மேலும், கலெக்டர் அலுவலகம் உட்பட நிர்வாக ரீதியாக, உடுமலையிலிருந்து, பல்லடம் வழியாக திருப்பூருக்கு செல்லும் வாகனங்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
தொழிற்சாலைகள், காற்றாலைகள் தேவைக்காக, கனரக வாகன போக்குவரத்தும், உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், பல மடங்கு கூடுதலாகியுள்ளது. இதையடுத்து, நெடுஞ்சாலையை நான்கு வழித்தடமாக மேம்படுத்தவும், முக்கிய சந்திப்பு பகுதிகளில் பாலம் கட்டவும் தமிழக அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடப்பட்டது.
திட்ட அறிக்கை
இதையடுத்து, மாநில நெடுஞ்சாலை மேம்பாட்டுக்காக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், நெடுஞ்சாலைத்துறை சார்பில், திட்ட அறிக்கை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பினர்.
அதில், விரிவாக்க பணிகளுக்காக, கையகப்படுத்த வேண்டிய நிலங்கள், மின்கம்பங்கள் மாற்றியமைத்தல், கூடுதல் பாலங்கள் தேவைப்படும் இடங்கள் குறித்த விபரங்கள் இடம் பெற்றிருந்தது.
உடுமலை - பல்லடம், பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை சந்திக்கும் நால்ரோடு சந்திப்பு குடிமங்கலத்தில் அமைந்துள்ளது. இந்த சந்திப்பு பகுதியில், சென்டர் மீடியன் அமைத்தும், போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த, வட்டார போக்குவரத்துதுறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து போலீஸ் உட்பட துறையினர் ஒருங்கிணைந்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு, மண் பரிசோதனையும் செய்யப்பட்டது. ஆனால், மாநில நெடுஞ்சாலை விரிவாக்கம், பாலம் கட்டுதல் உள்ளிட்ட எவ்வித பணியும் துவங்காமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், போக்குவரத்து நெரிசல் பல மடங்கு அதிகரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் தொடர்கதையாக உள்ளது.
எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் சமர்ப்பித்த கருத்துரு அடிப்படையில், ரோடு விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ள, அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டால், தொழிற்சாலை சார்ந்த முதலீடுகள் கிராமப்பகுதிகளில் அதிகரிக்கும்.