/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்த ஊராட்சி நிர்வாகம்
/
நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்த ஊராட்சி நிர்வாகம்
ADDED : ஜூலை 31, 2025 11:27 PM

சேவூர்; சேவூரில் குளத்துக்கு செல்லும் மழை நீர் வழித்தடத்தை ஆக்கிரமித்து டன் கணக்கில் மலை போல் குப்பைகளை குவித்து வைத்துள்ள ஊராட்சி நிர்வாகத்துக்கு பசுமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவிநாசி ஒன்றியம், சேவூரில் இருந்து கோபி செல்லும் ரோட்டில், சிந்தாமணிபாளையம், வலையபாளையம், கிளாகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள குட்டைகளில் சேகரமாகும் மழைநீர், சேவூர் குளத்துக்கு செல்கிறது. இக்குளம் நிரம்பினால், சுற்றுவட்டாரத்திலுள்ள விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். ஆனால், நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து, சேவூர் ஊராட்சி நிர்வாகம், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்காமல் கொட்டி மலைபோல் தேக்கி வைத்துள்ளனர். குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கவும் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து விற்பனை செய்வதால், ஊராட்சி நிர்வாகத்துக்கு கணிசமான வருவாய் கிடைக்கும்.
இதற்கிடையில் குப்பைகளில் கழிவு பொருட்கள் சேகரித்து விற்பனையில் ஈடுபடும் சிலர், குப்பைக்கு தீ வைப்பதால் கடும் புகை எழும்பி அப்பகுதி முழுவதும் சுவாசிக்க முடியாத வகையில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் வசிக்க முடியவில்லை. கடும் துர்நாற்றம் ஏற்படுவதுடன், ஈக்கள் அதிகளவில் வீடுகளுக்குள் புகுந்து உணவு, தண்ணீர் என அனைத்திலும் மொய்ப்பது, மாலை நேரங்களில் கொசு தொந்தரவுகள் அதிகமாக உள்ளதாகவும் அருகில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, உடனடியாக ஊராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை குடியிருப்பு இல்லாத பகுதியில் கொட்டி தரம் பிரித்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.