/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., பாசனத்திற்கு தண்ணீர் வழங்குவதில்... கோடையில் சிக்கல்!மழை குறைவால் பற்றாக்குறைக்கு வாய்ப்பு
/
பி.ஏ.பி., பாசனத்திற்கு தண்ணீர் வழங்குவதில்... கோடையில் சிக்கல்!மழை குறைவால் பற்றாக்குறைக்கு வாய்ப்பு
பி.ஏ.பி., பாசனத்திற்கு தண்ணீர் வழங்குவதில்... கோடையில் சிக்கல்!மழை குறைவால் பற்றாக்குறைக்கு வாய்ப்பு
பி.ஏ.பி., பாசனத்திற்கு தண்ணீர் வழங்குவதில்... கோடையில் சிக்கல்!மழை குறைவால் பற்றாக்குறைக்கு வாய்ப்பு
ADDED : மார் 14, 2024 11:50 PM

உடுமலை,;பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலங்கள், நான்கு மண்டலங்களாக பிரித்து, சுழற்சி முறையில் நீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில், கோவை மாவட்டத்திலுள்ள, பல்லடம், சூலுார் தாலுகா மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், பல்லடம், திருப்பூர் தாலுகாவிலுள்ள, 94 ஆயிரத்து, 521 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் முதல் மண்டல பாசனம், பிப்., 12ல் துவங்கியது.
வரும், மே 22 வரை, 100 நாட்களுக்கு, உரிய இடைவெளி விட்டு, இரண்டரை சுற்றுக்களில், 5 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் மண்டல பாசனம், முதல் சுற்றுக்கு நீர் வழங்கி, கடந்த, 12ம் தேதி நிறைவு செய்யப்பட்டுள்ளது.
திருமூர்த்தி அணையில் நீர்இருப்பு குறைந்துள்ளதால், மீண்டும் திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாய் வழியாக நீர் கொண்டு வந்து, சேகரிக்கும் பணி துவங்கியுள்ளது. இரண்டாம் சுற்றுக்கு, இம்மாத இறுதியில் நீர் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், குளிர் காலம் மற்றும் கோடை கால மழை ஏமாற்றி வருவதால், திட்ட தொகுப்பு அணைகளில் நீர்இருப்பு குறைந்துள்ளது.
இதனால், திட்டமிட்டபடி, முதல் மண்டல பாசனத்திற்கு, இரண்டரை சுற்றுக்கள் நீர் வழங்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறியதாவது:
பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்திற்கு, இரண்டரை சுற்றுக்களில், 5 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் வழங்க, 'வாட்டர் பட்ஜெட்' தயாரிக்கப்பட்டது. இந்நிலையில், எதிர்பார்க்கப்பட்ட நீர்வரத்து இல்லாததால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்போது, திட்ட தொகுப்பு அணைகளில், நேற்றைய நிலவரப்படி, 4,456.81 மில்லியன் கனஅடி நீர்இருப்பு மட்டுமே உள்ளது. முதல் மண்டல பாசனத்திற்கு, முதல் சுற்றில், 2 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் வழங்கப்பட்டுள்ளது. மீதம், ஒன்றரை சுற்றுக்களுக்கு, 3 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் வழங்க வேண்டும்.
முதல் மண்டல பாசனம் நிறைவு பெற்ற பின், காண்டூர் கால்வாய் விடுபட்ட பகுதிகளில் கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணி மற்றும் அணைகள், கால்வாய்கள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, அடுத்த நீர் திறப்பு ஆக., மாதம் ஆகிவிடும்.
அதுவரை, திருமூர்த்தி அணையில், உடுமலை நகராட்சி மற்றும் மூன்று ஒன்றிய கிராமங்களுக்கான குடிநீர் திட்டங்களுக்கு, 750 மில்லியன் கனஅடி வரை நீர் இருப்பு வைக்க வேண்டும்.
இதனால், முதல் மண்டல பாசனத்திற்கு, திட்டமிட்டபடி நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை பெய்தால் மட்டுமே, சமாளிக்க முடியும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
அணை நிலவரம்
திருமூர்த்தி அணையில் நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 60 அடியில், 36.31 அடி நீர்மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 1,935.25 மில்லியன் கனஅடியில், 1,033.34 மில்லியன் கனஅடி நீர்இருப்பு இருந்தது.
அணைக்கு, காண்டூர் கால்வாய் வழியாக, வினாடிக்கு, 723 கனஅடி நீரும், பாலாறு வழியாக, ஒரு கனஅடி என, 724 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து, தளி கால்வாயில், 84 கனஅடி நீர், குடிநீருக்கு, 21 கனஅடி நீர், இழப்பு, 14 கனஅடி நீர் என, 119 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டிருந்தது.

