/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., மண்டல பாசன நீர் திருட்டை தடுக்க... களம் இறங்குமா குழு?பற்றாக்குறை நீரையும் காப்பாற்ற வலியுறுத்தல்
/
பி.ஏ.பி., மண்டல பாசன நீர் திருட்டை தடுக்க... களம் இறங்குமா குழு?பற்றாக்குறை நீரையும் காப்பாற்ற வலியுறுத்தல்
பி.ஏ.பி., மண்டல பாசன நீர் திருட்டை தடுக்க... களம் இறங்குமா குழு?பற்றாக்குறை நீரையும் காப்பாற்ற வலியுறுத்தல்
பி.ஏ.பி., மண்டல பாசன நீர் திருட்டை தடுக்க... களம் இறங்குமா குழு?பற்றாக்குறை நீரையும் காப்பாற்ற வலியுறுத்தல்
ADDED : பிப் 16, 2024 12:51 AM

உடுமலை;பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், பாசன நீர் திருட்டை தடுக்க அதிகாரிகள் குழு களம் இறங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்தில், கோவை மாவட்டத்திலுள்ள, பொள்ளாச்சி, சூலுார் தாலுகா மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், பல்லடம், திருப்பூர் தாலுகாவிலுள்ள, 94 ஆயிரத்து, 521 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.
முதல் மண்டல பாசனத்திற்கு, கடந்த, 10ம் தேதி நீர் திறக்கப்பட்டு, மே 22 வரை, 100 நாட்களுக்கு, உரிய இடைவெளி விட்டு, இரண்டரை சுற்றுக்களில், 5 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் வழங்கப்பட உள்ளது.
இரண்டரை சுற்றுகள்
வழக்கமாக, பி.ஏ.பி., பாசனத்திற்கு, 5 சுற்றுக்கள், 135 நாட்கள் மண்டல பாசன காலமாக கொண்டு நீர் திறக்கப்படும்.
கடந்தாண்டு, பருவ மழை ஏமாற்றியதால், திட்ட தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளதால், நான்கு மற்றும் முதல் மண்டல பாசனத்திற்கு, இரண்டரை சுற்றுக்கள் மட்டும் நீர் வழக்கப்படுகிறது.
ஏற்கனவே, பற்றாக்குறை நீர் வழங்கப்படுவதால், முழுமையாக பயிர் சாகுபடி செய்ய முடியாமல், வறட்சியை சமாளிக்க, நிலைப்பயிர்களுக்கு உயிர்த்தண்ணீர் என்ற அளவில் மட்டுமே பயன்படும் சூழல் உள்ளது.
விவசாயிகள் வலியுறுத்தல்
பி.ஏ.பி., பிரதான கால்வாய் மற்றும் கிளைக்கால்வாய்களின் கரைகளின் இரு புறமும், விதி மீறி அமைந்துள்ள கிணறு, போர்வெல்கள் வாயிலாகவும், சைடு போர் அமைத்தும், நேரடியாக ஓஸ் அமைத்தும், பாசன நீர் திருடப்பட்டு வருகிறது.
தற்போது, கடும் வெயில் காலத்தில் பாசனம் துவங்கியுள்ள நிலையில், நீர் திருட்டு அதிகரித்து வருகிறது.
பாசன நீர் திருட்டை தடுக்கும் வகையில், நீர் வளத்துறை, வருவாய்த்துறை, மின் வாரியம் மற்றும் போலீசாரைக்கொண்ட கண்காணிப்பு குழு கிராமம் வாரியாகவும், கிளைக்கால்வாய், மடைகள் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அதிகாரிகள் கொண்ட பட்டியலுடனும், விவசாயிகள் புகார் தெரிவிக்கும் வகையில் மொபைல் எண்களுடன் கூடிய அறிவிப்பும், உடுமலை, திருப்பூர் பகுதிகளில் அமைக்கப்படவில்லை.
தண்ணீர் திறந்து பல நாட்களாகியும், இக்குழு அமைக்கப்படாததால், பாசன நீர் முழுமையாக நிலங்களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீர் திருட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அதிகாரிகள் மட்டுமின்றி, கூடுதல் போலீசார் இக்குழுவில் இடம் பெற வேண்டும்.
நீர் திருட்டு கண்டறியப்பட்டால், பாரபட்சமின்றி, உடனடியாக சம்பந்தப்பட்ட எல்லையிலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குப்பதிவு செய்து, நீர் திருட்டில் ஈடுபடுவோர் கைது செய்ய வேண்டும்.
அதோடு, நீர் திருடினால், மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், உடுமலை கோட்டம் உட்பட, மாவட்டத்தில், நீர் திருட்டை தடுக்க அரசு துறை அதிகாரிகளை கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்படாமல் உள்ளது.
எனவே, பி.ஏ.பி.,பாசன நீர் திருட்டை தடுக்க அதிகாரிகளை கொண்ட கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.
சுழற்சி முறையில், பகல் மற்றும் இரவு நேரங்களில், பிரதான கால்வாய், கிளைக்கால்வாய்கள் மட்டுமின்றி, காண்டூர் கால்வாய் பகுதிகளிலும், இக்குழு ரோந்து செல்வதோடு, நீர் திருட்டை கண்டறிந்தால், உடனடியாக வழக்கு பதிவு செய்து, மின் இணைப்பை துண்டித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வறட்சி காலத்தில் திறக்கப்பட்டுள்ள நீரை, முழுமையாக பாசன நிலங்களுக்கு உரிய பங்கீட்டு அடிப்படையில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.