ADDED : டிச 09, 2024 11:37 PM
திருப்பூர்; திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டிலுள்ள நஞ்சராயன் குளம், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு, வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் நவ., துவங்கி, ஜன., மாதம் வரை, ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது வழக்கம். இதுவரை, 189 வகை பறவைகள், இங்கு வந்து சென்றதற்கான பதிவுகள் உள்ளன.
குளம் மற்றும் சுற்றுப்புறத்தின் இயற்கை அழகு மாறாமல், சூழல் சுற்றுலாவுக்குரிய அம்சங்களை ஏற்படுத்த வனத்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி, உலக வனவிலங்கு நிதியம் மற்றும் வனத்துறை இணைந்து, இக்குளத்தில் மிதக்கும் செயற்கை தீவுகளை உருவாக்க திட்டம் வகுத்துள்ளன.
வனத்துறையினர் கூறுகையில், 'மிதவை ஏற்பாடு செய்து, அதில், நீர்வாழ் தாவரங்கள் வளர்க்கப்படும்; அந்த மிதக்கும் செயற்கை தீவை குளத்தின் மையப்பகுதி உள்ளிட்ட ஏதாவது ஒரு பகுதியில் மிதவை நிலையில் வைக்கும் போது, பறவைகள் அதில் வலசை வந்து செல்ல ஏதுவாக இருக்கும்; நீரில் மிதக்கும் மீன்களை, பறவைகள் பிடித்து உண்பதற்கும் வசதியாக இருக்கும்.
இந்த செயற்கை தீவு, பார்வைக்கும் அழகாக இருக்கும். வெள்ளோட்ட அடிப்படையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது,' என்றனர்.

