/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழந்தைகளுக்கு பெற்றோர் தான் 'ரோல்மாடல்'
/
குழந்தைகளுக்கு பெற்றோர் தான் 'ரோல்மாடல்'
ADDED : நவ 14, 2025 12:13 AM

ந ம் வீட்டுக்கு குழந்தைகளை ஆரோக்கியமாகவும், நல்லொழுக்கம் போதித்து, நேர்மையானவர்களாக, நேர்மறை சிந்தனை உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது மிக அவசியம். நாளைய இந்தியா ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அடுத்த தலைமுறையாக மாற போகும் குழந்தைகள் உடல் நலனில் அக்கறை செலுத்துவதும், அவர்களை கண்ணும், கருத்துமாக வளர்ப்பதும் ஒவ்வொரு பெற்றோரின் கடமை.
அவிநாசி, அரசு மருத்துவமனை, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், மூத்த அறுவை சிகிச்சை நிபுணர், பத்மநாபன் கூறியதாவது:
இன்று நவீன வாழ்க்கை முறை, தொழில்நுட்பம், உணவுப் பழக்கங்கள் ஆகியவை குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. எனவே, காய்கறி, பழங்கள், தானியங்கள், புரதம் நிறைந்த உணவு பொருட்களை அதிகமாக குழந்தைகளுக்கு தர வேண்டும். 'ஜங்க்புட்', இனிப்பு பானங்கள் மற்றும் பதப்படுத்திய உணவுகளை தரக்கூடாது; உடலில் தண்ணீரின் அளவு சுறுசுறுப்புக்கு மிக முக்கியம். எனவே, சோர்வு ஏற்படும் போது தண்ணீர் அருந்த அறிவுறுத்த வேண்டும்.
நீண்ட நேரம் மொபைல் போனில் முழ்கியிருக்க கூடாது. உடல் மற்றும் மன உற்சாகத்துக்கு வீட்டுக்கு வெளியில் விளையாட வையுங்கள்; நண்பர்களுடன் ஜாலியாக விளையாட வேண்டும்; எட்டு மணி நேரம் துாங்க வேண்டும்.
மனம் விட்டு பேசுங்கள் குழந்தைகளுடன் பேசுங்கள்; எண்ணங்களை அறிந்து கொள்ளுங்கள்; மனம் நன்றாக இருந்தால், உடல் நலமாக இருக்கும். படிப்பு, ஓய்வு சமநிலை பேணுவ அவசியம். வாசிப்பு, வரைதல், இசை, விளையாட்டு போன்ற ஆக்கப்பூர்வ செயல்களுக்கு ஊக்கப்படுத்துங்கள். புத்தக வாசிப்பு மற்றும் படைப்பாற்றல் செயல்களில் ஈடுபடச் செய்யுங்கள். குழந்தைகள் ஒவ்வொருவரிடத்திலும் தனித்துவம் இருக்கும்; எனவே, மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம். பெரியவர்களாகும் வயதில் உடல் மாற்றங்கள் குறித்து குழந்தைகளுக்கு மரியாதையுடன் எடுத்துக்கூற வேண்டும்.
அலட்சியம் கூடாது உங்கள் குழந்தைக்கு தேவையான அனைத்து தடுப்பூசிகளையும் தவறாமல் குழந்தைகள் நல மருத்துவர் ஆலோசனையில் செலுத்தி விட வேண்டும். அதுவே, தீவிர நோய்களிலிருந்து சிறந்த பாதுகாப்பாக அமையும். பார்வை, செவிவழி அல்லது வளர்ச்சி குறைகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் தடுப்பூசி பதிவு மற்றும் வளர்ச்சி குறிப்பு அப்டேட்டில் இருக்க வேண்டும்.
எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில், குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை தவறாமல் செய்யுங்கள். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தும் கொடுக்க வேண்டாம். காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறி இருந்தால், மருத்துவரை சந்திப்பது நல்லது. குழந்தைகளுக்கு நாம் தான் முதல் 'ரோல்மாடல்'. எனவே, நாம் நல்ல பழக்கங்களை பின்பற்றினால், அவர்களும் பின்தொடர்வார்கள்.
இவ்வாறு, டாக்டர் பத்மநாபன் கூறினார்.
- இன்று (நவ. 14) குழந்தைகள் தினம்.

