/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்காளரை ஈர்க்க கட்சிகள் ஆயத்தம்
/
வாக்காளரை ஈர்க்க கட்சிகள் ஆயத்தம்
ADDED : ஆக 03, 2025 11:49 PM

இ ன்னும், 8 மாதங்கள்... சட்டசபை தேர்தல் திருவிழா களைகட்ட போகிறது. அரசியல் களத்தில் திருப்புமுனையை ஏற்படுத்துவதில், 8 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூருக்கும் பங்குண்டு. கூட்டணி 'கணக்கு' இன்னும் உறுதிசெய்யப்படாத நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் தேர்தலுக்கு பிரதானக்கட்சியினர் ஆயத்தமாகி வருகின்றனர்.
ஓட்டு அறுவடைக்காக தி.மு.க.,வின் யுக்தி கடந்த சட்டசபை தேர்தலில், மாவட்டத்தில், 3 தொகுதிகளை மட்டுமே தி.மு.க., கைப்பற்றியது. கூடுதல் தொகுதிகளை இம்முறை கைப்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
கட்சிப்பணியை எளிமைப்படுத்த, ஏற்கனவே இருந்த, 2 மாவட்டங்கள், 4 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டு, ஓட்டு அறுவடைப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
'பெண்களுக்கு, 1,000 ரூபாய் உரிமைத் தொகை' என்ற அறிவிப்புடன் நடந்து வரும் 'உங்களுடன் ஸ்டாலின் திட்ட' முகாமில் திரளும் பெருங்கூட்டத்தை, ஓட்டுக்களாக மாற்ற வேண்டும் என்பதும், 'ஓரணியில் தமிழகம்' என்ற பெயரில் நடக்கும் உறுப்பினர் சேர்க்கையில், கட்சிக்கான வாக்காளர் எண்ணிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதும் கட்சித் தலைமையின் 'அசைன்மென்ட்'.
இந்த இலக்கை எட்ட களமிறங்கி பணியாற்றி வருகின்றனர், கட்சி நிர்வாகிகள்.மேலும், முடிவுற்ற அரசின் திட்டப்பணிகளை திறந்து வைப்பது, புதிய பணிக்கு அடிக்கல் நாட்டுவது என, மக்கள் மத்தியில் நற்பெயரை சம்பாதிப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகிறது.
பிரச்னைகளே மையம் அ.தி.மு.க., திண்ணம் திருப்பூர், பொதுவாக அ.தி.மு.க.,வுக்கு செல்வாக்குள்ள தொகுதி என்ற நிலையில் தற்போதைய இருப்பை தக்க வைக்கவும், இழந்த தொகுதிகளை மீட்டெடுக்கவும் கட்சியினர் வியூகம் வகுத்து வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியின் போது, நடிகர் விஜய் கட்சிக்கு சிதறும் ஓட்டுகளின் விவரத்தை சேகரிக்கின்றனர்; சிதறும் ஓட்டுகள், எந்த கட்சிக்கு சாதகம், பாதகம் என்பதையும் அலசுகின்றனர்.
ஒவ்வொரு பகுதியாக பூத் கிளை செயலாளர் மற்றும் பூத் ஏஜன்ட்களுக்கு அவ்வப்போது ஆலோசனைக் கூட்டம் நடத்தி, பல்வேறு ஆலோசனைகளையும் நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர். 'எங்களுடன் எடப்பாடியார்' என்ற ஸ்டிக்கரை ஒட்டி, மக்கள் மனதில் இடம் பிடிக்க முயற்சிக்கின்றனர்.
''கூட்டணி பலத்தை சரியாக பயன்படுத்தி, மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு, தலைவிரித்தாடும் குப்பை பிரச்னையை அழுத்தமாக மக்கள் மத்தியில் முன்வைத்து, ஆளுங்கட்சி மீது வெறுப்புணர்வை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். மாநகரில் நிலவும் குப்பை பிரச்னையை பெரிதுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
இந்த தேர்தல் பணி என்பது, உள்ளாட்சி தேர்தலை குறி வைத்தும் மேற்கொள்ளப்படுகிறது'' என்கின்றனர் கட்சியினர்.
பூத் கமிட்டி பலமாக்க பா.ஜ., வியூகம் தொழில் நகரமான திருப்பூரில் தங்களின் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்பதில் பா.ஜ., உறுதியாக இருக்கிறது.
பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது: வார்டு, வாரியாக பொதுமக்களின் பிரச்னைகளை கையில் எடுப்பது மற்றும் பூத் கமிட்டி பலப்படுத்தும் பணியில் கவனம் செலுத்தி வருகிறோம்.
திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் அதிகம் வசிப்பது சாதகம் என்ற நிலையில், வட மாநிலங்களில் இருந்து நிர்வாகிகளை அழைத்து வந்து, தேர்தல் பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். 3 பூத்துக்கு ஒரு பொறுப்பாளர், 10 பூத்துகளுக்கு ஒரு பொறுப்பாளர் என, அடிமட்ட கட்சி கட்டமைப்பில் கவனம் செலுத்தி வருகிறோம். வரும், நவ., மற்றும் டிச., மாதம் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்'' என்கின்றனர்.
சட்டசபை தேர்தலுக்கு பின் நடக்கும் உள்ளாட்சி தேர்தலை குறி வைத்து, இப்போதே, ஒவ்வொரு வார்டிலும் செல்வாக்குள்ள கட்சியினரை வேட்பாளராக்குவது குறித்த காய் நகர்த்தலிலும், நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்ணைப் பிரசாரம் நாம்தமிழர் தீவிரம் அரசியல் களத்தில் தனித்து களமாடி வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தெற்கு தொகுதிக்கு அபிநயா என்பவரை வேட்பாளராக அறிவித்து, தேர்தல் வேலைகளை சுறுசுறுப்பாக்கியிருக்கிறார்.
'கட்சியின் கொள்கை, சிந்தனை, எண்ணத்தை மக்கள் மத்தியில் விதைத்து வருகிறோம். வார்டு வாரியாக சென்று, மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து, சம்மந்தப்பட்ட துறையின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு ஏற்படுத்தி கொடுக்க முயற்சித்து வருகிறோம்' என்கின்றனர் கட்சியினர்.
திண்ணை பிரசாரத்தில் கவனம் செலுத்த வேட்பாளர்களும், கட்சியினரும் தயாராகி வருகின்றனர்.
மக்கள் மனநிலை மாற்றம் த.வெ.க.,வினர் எண்ணம் த.வெ.க., பிரத்யேக மொபைல் செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்தி வருகிறது.
கட்சியினர் கூறுகையில், ''வார்டு தோறும் சென்று மக்களின் குறை கேட்டு வருகிறோம். கழிவுநீர் கால்வாய் அமைப்பு, சாலை சீரமைப்பு, குடிநீர் உட்பட மக்கள் கூறும் பிரச்னைகளை சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்த்து வைக்கிறோம்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்களே களத்தில் இறங்கி அந்த வேலையை செய்து கொடுக்கிறோம். வீடு, வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த உள்ளோம். மாறி, மாறி இரு கட்சிகளின் ஆட்சியை மக்கள் பார்த்து விட்ட நிலையில், மாற்றம் வேண்டும் என்ற மக்களின் மனநிலையை, எங்களின் களப்பணி வாயிலாக உணர்கிறோம்'' என்கின்றனர்.