/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மேய்ச்சல் நிலமான தொழிற்பயிற்சி நிலையம்
/
மேய்ச்சல் நிலமான தொழிற்பயிற்சி நிலையம்
ADDED : டிச 20, 2024 10:39 PM

உடுமலை; உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், சுற்றுச்சுவர் இல்லாததால், வளாகம் மேய்ச்சல் நிலமாக மாறிவிட்டது.
உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரசு கலைக்கல்லுாரி ரோட்டில் அமைந்துள்ளது. இந்த நிலையத்துக்கான நிரந்தர கட்டடம், சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு தொடர் கோரிக்கைகளின் அடிப்படையில் கட்டப்பட்டது.
உடுமலை சுற்றுப்பகுதி தாராபுரம், பொள்ளாச்சி, பழநி என பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து படிக்கின்றனர். கடந்த கல்வியாண்டில், தொழிற்பயிற்சி மையத்துக்கென தொழிற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அடிப்படை தரமுள்ள கட்டமைப்புகள் இருந்தும், மையத்துக்கு போதிய பாதுகாப்பில்லாமல் உள்ளது. மையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை.
இதனால் விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரங்களில், இம்மையத்துக்கு தொடர்பில்லாத வெளிநபர்கள் வந்து வளாகத்தை பயன்படுத்துகின்றனர். தற்போது மையத்தின் முன்புள்ள இடம் மேய்ச்சல் நிலமாகவும் மாறிவிட்டது.
அருகிலிருந்து கால்நடைகள், இங்கு வளர்ந்துள்ள செடிகளை மேய்ந்து வருகின்றன. கால்நடைகள் கட்டிப்போடப்படாமல் இருப்பதால், மாணவர்களின் பாதுகாப்புக்கும் உறுதி இல்லாமல் உள்ளது.
எனவே, இங்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் அல்லது அமைக்கும் வரை தற்காலிகமாக கம்பி வேலி அமைப்பதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.