/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதல்வர் கையால்தான் பட்டா: கிராம மக்கள் திடீர் முற்றுகை
/
முதல்வர் கையால்தான் பட்டா: கிராம மக்கள் திடீர் முற்றுகை
முதல்வர் கையால்தான் பட்டா: கிராம மக்கள் திடீர் முற்றுகை
முதல்வர் கையால்தான் பட்டா: கிராம மக்கள் திடீர் முற்றுகை
ADDED : ஆக 10, 2025 10:42 PM

பல்லடம்:
பல்லடம் ஒன்றியம், செம்மிபாளையம் ஊராட்சி பகுதியில், 80 குடும்பங்கள் பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு, இன்று உடுமலை வருகை தரும் முதல்வர் ஸ்டாலின் கையால் பட்டா வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்காக இப்பகுதி பொதுமக்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படாத நிலையில், பொதுமக்கள் பட்டா கேட்டு நேற்று பல்லடம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'மாவட்டம் முழுவதும் 800-க்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டா வழங்கவுள்ள நிலையில், செம்மிபாளையம் ஊராட்சியிலும், 80 பேர் தேர்வு செய்யப்பட்டு, கடந்த முறையே முதல்வர் கையால் பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டது. முதல்வர் உடுமலை வருகை தர உள்ள நிலையில், பட்டியலில் செம்மிபாளையம் சேர்க்கப்படவில்லை. எங்களுக்கு பட்டா தரவில்லை எனில் யாருக்கும் தரக்கூடாது. முதல்வர் கையால் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். அதுவரை நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம்' என்றனர்.
தாசில்தார் சபரி கூறுகையில். 'உங்கள் யாருக்கும் பட்டா இல்லை என்று யாரும் கூறவில்லை. அனைவருக்கும் உறுதியாக பட்டா வழங்கப்படும். திட்டமிட்டு நடக்கும் முதல்வர் நிகழ்ச்சியில், திடீரென மாற்றம் ஏற்படுத்த முடியாது. எனவே, உறுதியாக இந்த வாரத்துக்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
தாசில்தாரின் பேச்சை ஏற்க மறுத்த பொதுமக்கள், 'நீங்கள் நினைத்தால் எங்களுக்கு பட்டா வழங்க முடியும். கலெக்டரிடம் பேசி பட்டா வழங்க நடவடிக்கை எடுங்கள்' என்று கூறி, தாலுகா அலுவலக வளாகத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த தி.மு.க., ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, 'தாசில்தார் கூறியபடி, இரண்டு நாட்களில் உறுதியாக உங்களுக்கு பட்டா இங்கேயே வழங்கப்படும். இல்லையெனில், நானும் உங்களுடன் இணைந்து போராடுவேன்' என்றார். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
---
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார் தாசில்தார் சபரி.
காலில் விழுந்த முதியவர்.