/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம் கொடுங்க! பள்ளிகளின் சுகாதாரம் கேள்விக்குறி
/
துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம் கொடுங்க! பள்ளிகளின் சுகாதாரம் கேள்விக்குறி
துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம் கொடுங்க! பள்ளிகளின் சுகாதாரம் கேள்விக்குறி
துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம் கொடுங்க! பள்ளிகளின் சுகாதாரம் கேள்விக்குறி
ADDED : நவ 17, 2024 09:53 PM
உடுமலை; துாய்மை பாரத திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் துாய்மைப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.
துவக்கப்பள்ளி பணியாளர்களுக்கு, 1,300 ரூபாய்; நடுநிலைப்பள்ளி பணியாளர்களுக்கு 2,500 ரூபாய்; உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் ஊதியம் வழங்கப்படுகிறது.
இப்பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படுவதில்லை. குறிப்பிட்ட மாதங்கள் இடைவெளிவிட்டு வழங்கப்படுகிறது.
ஆனால், அந்த இடைவெளி தற்போது அதிகரித்துக்கொண்டே வருவதால், பள்ளிகளில் சுகாதார பணிகள் பாதிக்கப்படுகிறது.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் இப்பணிக்கு வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிரமப்படுத்தும் வகையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டு துவங்கியது முதல் இப்பணியாளர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கவில்லை. ஏற்கனவே, மாதந்தோறும் வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவாக உள்ள நிலையில், அந்த ஊதியமும் பல மாதங்களாக நிலுவையில் இருப்பதால் பணியாளர்கள் பணிக்கு வர மறுக்கின்றனர்.
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் சொந்த செலவில், தற்போது சில பள்ளிகளில் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குகின்றனர். ஆனால், பல மாதங்களாக அரசின் சார்பில் ஊதியம் வழங்காமல் இருப்பதால் ஆசிரியர்களும் அதிருப்தியில் உள்ளனர்.
இதனால், பள்ளிகளின் சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், துாய்மைப்பணியாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் எந்த பயனும் இல்லாத வகையில், தற்போது திட்டத்தின் நிலை உள்ளது. கூடுதலாக ஊதியம் வழங்குவது தாமதமாகும் நிலையில், பள்ளிகளில் சுகாதார பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளனர்.
நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்குவதற்கும், மாதந்தோறும் ஊதியம் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என, துாய்மை பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.