ADDED : ஆக 14, 2025 09:45 PM

அவிநாசி; அவிநாசி - ஈரோடு ரோட்டில், புதன்கிழமை தோறும் நகராட்சி வாரச்சந்தை கூடுகிறது. வீட்டிற்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்குவதற்கு இப்பகுதியினர் சந்தையை பெரிதும் நம்பி உள்ளனர்.
நேற்று முன்தினம் அவிநாசி வாரச்சந்தையில் சூளை பகுதியைச் சேர்ந்த லாவண்யா, 36, என்பவர் ஒரு கடையில் காய்கறிகளுடன் பச்சை பட்டாணியை வாங்கி வந்துள்ளார். குழந்தைகளுக்கு பள்ளியில் சாப்பிடுவதற்காக பட்டாணியை நேற்று முன்தினம் இரவு தண்ணீரில் ஊற வைத்துள்ளார்.
நேற்று காலை பார்க்கும் போது அதிலிருந்து பச்சை கலர் பிரிந்து தனியாக தண்ணீரில் கலந்து நின்றது. அதிர்ச்சி அடைந்த அவர் சமைக்காமல் விட்டு விட்டார். இதேபோல் பல்வேறு தானியங்களுக்கும் சாயம் பூசி விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
லாவண்யா கூறுகையில், ''ஒரு பாக்கெட் பட்டாணி 20 ரூபாய் என மூன்று பாக்கெட்டுகள் வாங்கி வந்தேன். பட்டாணியிலிருந்து சாயம் கரைந்து தண்ணீரில் கலந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்'' என்றார்.
உணவு பொருள் பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் தொடர்ந்து உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒவ்வாமை ஏற்படும் மருத்துவர்கள் கூறியதாவது: ரசாயன கலவைகள், சாயங்கள் பூசப்பட்ட உணவு பண்டங்களை சாப்பிடும் போது அஜீரணக் கோளாறு, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும். குழந்தைகள் என்றால் குடலில் ஒவ்வாமை ஏற்படுத்தும்.
வாந்தி, வயிற்றுப்போக்கு அதனைத் தொடர்ந்து உடல் சோர்வடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும் நிலைமை வந்துவிடும்.