/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வானில் பறக்க தவம்; குறும்படம் கொடுத்த வரம்!
/
வானில் பறக்க தவம்; குறும்படம் கொடுத்த வரம்!
ADDED : ஜூன் 07, 2025 11:26 PM

'வானில் பறக்கும் விமானத்தை வியந்து மட்டுமே பார்த்த எனக்கு, விமானத்தில் செல்லும் வாய்ப்பை குறும்படம் பெற்றுத்தந்தது...' நெகிழ்ந்தார், ஜெர்மனி சென்று திரும்பிய அரசு பள்ளி மாணவர் லோக ராஜேஷ்.
திருப்பூர், பல்லடம் ரோடு, கருப்பக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்த போது, 'நிலா' என்ற குறும்படத்தை தனது குழுவினருடன் இணைந்து தயாரித்திருந்தார்.
மாவட்ட அளவிலான போட்டிக்கு, இப்படம் தேர்வானது. அதற்கடுத்து, 'மொபைல் போன் எனும் கொல்லும் அரக்கன்' என்ற அடுத்த குறும்படம், சென்னையில் நடந்த மாநில போட்டிக்கு தேர்வானது.
அந்த குறும்படம் பெரிய அளவிலான ஆதரவை பெற, ஜெர்மனி செல்லும், 22 பேர் குழுவில் லோகராஜேஷ்க்கும் இடம் கிடைத்தது. சிறுவர்களுக்கான சினிமா தயாரிப்பு, எடிட்டிங்கில் சிறந்து விளங்கியதற்கான அங்கீகாரமாக இது அமைந்தது.
மாணவர் கூறியதாவது:
குறும்பட என்றால் என்ன என, கணக்கு ஆசிரியர் கணேஷ்குமாரிடம் கேட்டேன். சிறார் குறும்படங்கள், அவற்றின் மூலம் சொல்ல வரும் கருத்துக்களை அவர் விளக்கினார்.
நிலா குறும்படத்துக்கு தயாரான போது, 9 பேர் கொண்ட எங்கள் குழுவினரிடம், தலைமை ஆசிரியர் நந்தகோபால்,'நல்ல ஆர்வமாக உள்ளீர்கள்; நிச்சயம் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்,' எனக்கூறி ஊக்கப்படுத்தினார்; ஆசிரியர் வாஞ்சிநாதனும் வழிகாட்டினார்.
இவர்கள் அளித்த உத்வேகம் தான் மாவட்ட போட்டியில் வெற்றி பெற காரணமாக இருந்தது. மாநில போட்டியில் திரைப்பட இயக்குனராக உள்ள என் மாமா குமார்தங்கவேல், எடிட்டிங் சார்ந்த யோசனைகளை வழங்கினார். திறமைக்கு, நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்தேன்.
வானில் பறக்கும் விமானத்தை வியந்து மட்டுமே பார்த்து பழகிய எனக்கு, அதில் பறக்கம் வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. ஜெர்மனியில், பலரும் தமிழில் பேசியது வியப்பாக இருந்தது. மிக துாய்மையான சொர்க்க பூமி அது. கார் தயாரிப்பு தொழிற்சாலை, முனிச் நகரம், அறிவியல் ஆய்வகம், அறிவியல் பல்கலை, அருங்காட்சியகம் அழைத்துச் சென்றனர்.
ஜெர்மனி சாலையில் ஒரு இடத்தில் கூட போக்குவரத்து நெரிசல், காத்திருப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஹாரன் சத்தம் கூட காதுகளில் கேட்கவில்லை. வாகன விதிமுறைகளை மிக கச்சிதமாக பின்பற்றுகின்றனர். இவ்வாறு, லோகராஜேஷ் கூறினார்.
திருப்பூர், கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் தற்போது வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறார். இவரது பெற்றோர் கிருஷ்ணன் - அலமேலுமங்கை. இவரது தங்கை சாருமதி; கருப்பகவுண்டம்பாளையம் உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்.