/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வளைந்து நெளிந்து செல்லும் கழிவுநீர் கால்வாய்; திட்டமிடல் இல்லை என மக்கள் குற்றச்சாட்டு
/
வளைந்து நெளிந்து செல்லும் கழிவுநீர் கால்வாய்; திட்டமிடல் இல்லை என மக்கள் குற்றச்சாட்டு
வளைந்து நெளிந்து செல்லும் கழிவுநீர் கால்வாய்; திட்டமிடல் இல்லை என மக்கள் குற்றச்சாட்டு
வளைந்து நெளிந்து செல்லும் கழிவுநீர் கால்வாய்; திட்டமிடல் இல்லை என மக்கள் குற்றச்சாட்டு
ADDED : ஜன 29, 2025 03:49 AM

பல்லடம்; உரிய திட்டமிடல் இன்றி கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டு வருவதாக, பல்லடத்தில், குடியிருப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பல்லடம்- - மங்கலம் ரோடு, எஸ்.ஏ.பி., நகர் குடியிருப்பு பகுதியில், நகராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் கட்டுமான பணி துவங்கியுள்ளது. உரிய திட்டமிடல் இன்றியும், கழிவுநீர் கால்வாய் சுற்றி வளைத்து கட்டப்பட்டு வருவதாகவும் இப்பகுதி குடியிருப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
எஸ்.ஏ.பி., நகரின் ஒரு வீதியில் ஏற்கனவே கழிவு நீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் சரிவர கட்டாமல் மேடு பள்ளமாக இருப்பதால், கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசியும், கொசு தொல்லையும் ஏற்பட்டு வருகிறது. இச்சூழலில், எஸ்.ஏ.பி., நகரின் பிரதான வழித்தடத்தில், கழிவு நீர் கால்வாய் கட்டும் பணி, எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென துவங்கியது.
தெருவின் கடைசியில் இருந்து கால்வாயை வாட்டமாக கட்டினால் மட்டுமே, கழிவுநீர் தடையின்றி செல்லும். ஆனால், மேடாக உள்ள பகுதி என்றும் பார்க்காமல், சுற்றி வளைத்து கால்வாய் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. உரிய திட்டமிடல் இன்றி, திடீரென ஒரே நாள் இரவில் கால்வாய்க்கு குழி தோண்டப்பட்டுள்ளது.
கால்வாய் அமைக்கப்பட்டால், மீண்டும் கழிவு நீர் ஒரே இடத்தில் தேங்குவதுடன், மக்களின் வரிப்பணமும் வீணாகும்.  இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் யாரும் வந்து பார்வையிடவில்லை.
நகராட்சி பொறியாளரின் ஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்டு வருகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, திட்ட மிடப்படாமல் கட்டப்படும் கழிவுநீர் கால்வாய் பணியை நிறுத்த வேண்டும். யாருக்கும் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

