/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாய்க்கால் வழித்தடம் சீரமைக்க மக்கள் கெடு
/
வாய்க்கால் வழித்தடம் சீரமைக்க மக்கள் கெடு
ADDED : ஜூன் 21, 2025 12:42 AM

பல்லடம் : பல்லடம் அருகே, சேதமடைந்த வாய்க்கால் வழித்தடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள், 15 நாள் கெடு விதித்தனர்.
பல்லடம்-, மங்கலம் ரோடு, அறிவொளி நகர் செல்லும் வாய்க்கால் வழித்தடத்தின் ஒரு பகுதி சேதமடைந்து பள்ளம் உருவானது. இதில், வாகன ஓட்டிகள் பலரும் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதை சீரமைக்க வலியுறுத்தி, கடந்த மாதம் இப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சமரசம் செய்த போலீசார், தற்காலிக தடுப்பு ஏற்படுத்தினர்.
நேற்று முன்தினம், வாகன ஓட்டி ஒருவர் பள்ளத்தில் விழுந்ததை தொடர்ந்து, ஆவேசமடைந்த பொதுமக்கள், மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், அதுவரை மறியலை கைவிடுமாறும் கூறினர்.
போலீசாரின் வாக்குறுதியை ஏற்று மறியல் கைவிடப்பட்டது. சில மணி நேரங்களில் வந்த பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடையே, வழித்தடத்தை யார் சீரமைப்பது என்ற விவாதம் எழுந்தது.
இதைக்கண்டு, ஆவேச மடைந்த பொதுமக்கள், 'யார் பாதையை சீரமைப்பது என்று இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள். இனிமேலும் நாங்கள் பொறுத்திருக்க மாட்டோம். இனி எந்த விபத்தும் ஏற்படக்கூடாது; ஒவ்வொரு முறையும் நாங்கள் மறியல் செய்ய முடியாது.
இன்று ஒரு முடிவு தெரியாமல் இங்கிருந்து செல்ல மாட்டோம்' என்றனர். இதனையடுத்து, அடுத்த, 15 நாட்களுக்குள் வழித்தடம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
குறிப்பிட்ட காலக்கெடு வுக்குள் வழித்தடத்தை சீரமைக்காவிட்டால், ஊர் பொதுமக்கள் அனைவரையும் திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்து சென்றனர்.