/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கழிப்பிடம் அமைக்க கேட்டு மக்கள் போராட்டம்
/
கழிப்பிடம் அமைக்க கேட்டு மக்கள் போராட்டம்
ADDED : மார் 15, 2024 01:01 AM

திருப்பூர்:தேர்வு செய்யப்பட்ட இடத்தில், பொதுகழிப்பிடம் கட்டித்தரக்கோரி சக்திவிநாயகபுரம் பகுதி பொதுமக்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
காங்கயம் தாலுகா நிழலி, சக்தி விநாயகபுரத்தைச்சேர்ந்த பொதுமக்கள், 75 பேர், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். பொதுகழிப்பிடம் கட்டித்தராததை கண்டித்து, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைப்பதாக கூறி, கலெக்டர் அலுவலக போர்டிகோ பகுதியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: குண்டடம் ஒன்றியம், எல்லப் பாளையம் புதுார் ஊராட்சி, சக்தி விநாயகபுரம் கிராமத்தில், பொது கழிப்பிடம் அமைத்து தரக்கோரி, கலெக்டரிடம் மனு அளித்தோம். அதனடிப்படையில், சர்வே எண்: 195ல் உள்ள அரசு நிலத்தில், துாய்மை பாரத இயக்கம் மூலம், சமுதாய சுகாதார வளாகம் அமைப்பதற்காக, 7.85 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு நிலத்துக்கு அருகாமையில் உள்ள தனியார் ஒருவர், பொது கழிப்பிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். கோர்ட் மூலம், கழிப்பிடம் கட்டுவதற்கு இடைக்கால தடை பெற முயற்சிக்கிறார். கழிப்பிடம் கட்டும் பணிக்கு டென்டர் எடுக்கவிடாமல், ஒப்பந்ததாரர்களை தடுக்கின்றனர். சக்தி விநாயகபுரம் பகுதி பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள் கழிப்பிட வசதியின்றி தவிக்கிறோம். அதிகாரிகள் கள ஆய்வு செய்து, ஏற்கனவே தேர்வு செய்த அதே இடத்தில், கழிப்பிடம் அமைத்துத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
அதிகாரிகள், போலீசார் சமாதானப்படுத்திய போதும், மாலை வரை போராட்டம் தொடர்ந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் டி.ஆர்.ஓ., ஜெய்பீம் ஆகியோர், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். டெண்டர் விடப்பட்டு, பொது கழிப்பிடம் கட்டு வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளிக்கப்பட்டதால், பொதுமக்கள், போராட்டத்தை கைவிட்டனர்.

