/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மனுக்களுடன் திரளும் மக்கள்!
/
தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மனுக்களுடன் திரளும் மக்கள்!
தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மனுக்களுடன் திரளும் மக்கள்!
தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மனுக்களுடன் திரளும் மக்கள்!
ADDED : மார் 25, 2025 06:53 AM

திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில், பொதுமக்கள், தன்னார்வ அமைப்பினர் பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி, கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு அளித்தனர்.
அந்த மனுக்கள், உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, துறை சார்ந்த அரசு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நேற்றைய கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 831 மனுக்கள் பெறப்பட்டன.
பூசணிக்காயால் ஆபத்து
பல்லடம் வட்டார, சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள், பூசணிக்காயுடன் வந்து அளித்த மனுவில், 'திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமைகளில் ரோட்டில் திருஷ்டி பூசணிக்காய் உடைக்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள், ரோட்டில் சிதறிகிடக்கும் பூசணிக்காய் மீது வாகனங்களை ஏற்றி, தடுமாறி விழுகின்றனர். மாவட்டம் முழுவதும் பூசணிக்காய்களை ரோட்டில் உடைப்பதை தடை செய்து, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று குறிப்பிட்டுள்ளனர்.
பல்லாங்குழி சாலையால் அவதி
திருக்குமரன் நகர் பகுதி மக்கள் அளித்த மனுவில், 'மாநகராட்சி, 57வது வார்டு, திருக்குமரன்நகர், அமராவதி நகர், முத்தையன் நகர், மூகாம்பிகை நகர், வள்ளலார் நகர், அம்மன் நகர் பகுதிகளில் சாலை, சாக்கடை கால்வாய் வசதிகள் இல்லை. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், ரோட்டில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது.
குடியிருப்பு பகுதி மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. குண்டும் குழியுமாக உள்ள ரோட்டை சீரமைத்து, சாக்கடை கால்வாய் வசதி செய்துதரவேண்டும். காளிகுமாரசுவாமி கோவில் முதல் வள்ளலார் நகர் வரை ரோட்டில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,' என கூறியுள்ளனர்.
அடிப்படை வசதி வேண்டும்
ஜெ.ஜெ., நகர் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
திருப்பூர் மாநகராட்சி, 46வது வார்டு, ஜெ.ஜெ., நகர், செந்தில்நகர், பள்ளக்காடு தோட்டம் பகுதிகளில், 25 ஆண்டுகளாக, 100 குடும்பத்தினர் வசிக்கிறோம். பள்ளக்காடு மற்றும் ரோகிணி பஸ் ஸ்டாப்பிலிருந்து ஊருக்குள் செல்வதற்கு சாலை வசதி இல்லை. கர்ப்பிணிகள், முதியோர், பெண்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
தெருவிளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் வீடு திரும்பும் தொழிலாளர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. குடிநீர் வசதியும் ஏற்படுத்தித்தரவில்லை. மாதம் ஒருமுறை லாரி தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
இலவச பட்டா கொடுங்க...
சாமளாபுரம் பகுதி மக்கள்அளித்த மனு:
சாமளாபுரம் பேரூராட்சியில் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, அப்பகுதியில் வசித்தோருக்கு, செந்தேவிபாளையத்தில் மாற்று இடம் வழங்கப்பட்டது. 90 பேருக்கு பட்டா வழங்கியநிலையில், 15 பேருக்கு இடம் தேடி கொடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். தற்போது நிலம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நீர்நிலை ஆக்கிரமிப்பில் அகற்றப்பட்டு, வீடு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு, முன்னுரிமை அளித்து இலவச பட்டா வழங்க வேண்டும்.
தன்னிச்சை முடிவு
திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, சின்னசாமியம்மாள் மாநகராட்சி பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அளித்த மனு:
சின்னசாமியம்மாள் மாநகராட்சி பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு தலைவி, உறுப்பினர்களுடன் ஆலோசிக்காமல், தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். அரசு அலுவலகங்களில், பள்ளிக்கு எதிராக தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் மேலாண்மை குழு தலைவரை, பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தவிர, வீரபாண்டி, செல்வி நகர் பகுதி மக்கள் மற்றும் பல்லடம் தாலுகா, இச்சிப்பட்டி பகுதி மக்கள், இலவச வீட்டுமனை பட்டா வழங்க கேட்டும், மாநகராட்சி 11வது வார்டு பகுதியை சேர்ந்த பெண்கள், மகளிர் உரிமைத்தொகை வழங்க வலியுறுத்தியும் மனு அளித்தனர். இவ்வாறு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
நலத்திட்ட உதவி வழங்கல்
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், 44 பயனாளிகளுக்கு நல உதவி வழங்கப்பட்டது. தாட்கோ திட்டத்தில், 39 துாய்மை பணியாளர்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஒருவருக்கு, 15 ஆயிரத்து, 750 ரூபாய் மதிப்பிலான சக்கர நாற்காலியும், 3,285 ரூபாய் மதிப்பிலான, காதொலி கருவி ஒருவருக்கும் வழங்கப்பட்டது. பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், மூன்று பயனாளிகளுக்கு, மூன்று அயர்ன் பாக்ஸ் வழங்கப்பட்டது. கலெக்டர் கிறிஸ்துராஜ், இவற்றை வழங்கினார்.