/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிக்காக கரம் கோர்த்த மக்கள்; கல்விச்சீர் திருவிழா கோலாகலம்
/
பள்ளிக்காக கரம் கோர்த்த மக்கள்; கல்விச்சீர் திருவிழா கோலாகலம்
பள்ளிக்காக கரம் கோர்த்த மக்கள்; கல்விச்சீர் திருவிழா கோலாகலம்
பள்ளிக்காக கரம் கோர்த்த மக்கள்; கல்விச்சீர் திருவிழா கோலாகலம்
ADDED : ஆக 30, 2025 12:36 AM

பல்லடம்; பல்லடம் அருகே, பள்ளியின் வளர்ச்சிக்காக கரம் கோர்த்த கிராம மக்கள், கல்விச்சீர் வழங்கும் விழாவை கோலாகலமாக நடத்தினர்.
பல்லடம் அருகே கரைப்புதுார் ஊராட்சி, காளிநாதம்பாளையம் கிராமத்தில், அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கும் இப்பள்ளி, இடப்பற்றாக்குறையுடன் துவக்கப்பள்ளி வளாகத்தில் இயங்கி வந்தது.
ஊர் பொதுமக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தியதன் விளைவாக, உயர்நிலைப் பள்ளிக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டடமும் கட்டப்பட்டு, நடப்பு ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.
இதற்கிடையே, பள்ளிக்கும், படிக்கும் மாணவ, மாணவியருக்கும், பல்வேறு அடிப்படைத் தேவைகள் உள்ளன.
இது குறித்து அறிந்த தன்னார்வலர்கள், ஊர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளிக்குத் தேவையான உபகரணங்களை வழங்க முன் வந்தனர்.
மின்விசிறி, நாற்காலி, டேபிள், பக்கெட், குடம், பீரோ, நோட்டு புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்கள் சார்பில் பள்ளிக்கு வழங்கப்பட்டன.
முன்னதாக, ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்களுடன், அனைத்து பொருட்களும் சீர்வரிசையாக எடுத்து வரப்பட்டன.
டிரம்ஸ் மேளத்துடன், ஊரின் முக்கிய வீதிகள் வழியாக, சீர்வரிசைகளை ஏந்தியபடி, பெண்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
முகூர்த்த நாளான நேற்று ஏதோ திருமணத்துக்குத்தான், சீர் வரிசைகளுடன் செல்கின்றனர் என்று பலரும் நினைக்க, பள்ளிக்குத் தேவையான அத்தியா வசிய பொருட்களுடன் கல்விச்சீர் வழங்கும் விழா என்பதை அறிந்து பலரும் ஆச்சரியமடைந்தனர்.
ஊர்வலம் பள்ளியை அடைந்தவுடன், சீர்வரிசைகள் அனைத்தும், தலைமை ஆசிரியர் மேகநாதனிடம் ஒப்படைக்கப்பட்டன.