UPDATED : ஆக 17, 2026 11:06 PM
ADDED : ஆக 17, 2026 07:02 PM

திருப்பூர்:நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாத பிரச்னைகள், கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 727 மனுக்கள் அளிக்கப்பட்டன. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் நடந்த கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.
விலங்கு நல ஆர்வலர்கள்: திருப்பூரில் நாய்கள் பிறப்பு கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையான அறிக்கை வெளியிட வேண்டும். தெருநாய்களுக்கு சிகிச்சை, உணவு வழங்குவதில் உள்ள சிரமங்களை போக்க வேண்டும். கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருந்துகள் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும். பிறப்பு கட்டுப்பாடு செய்த நாய்களை பிடித்த இடத்திலேயே விட வேண்டும். மாவட்ட பிராணிகள் துயர் துடைப்பு சங்கத்தின் கூட்டங்களை மீண்டும் நடத்த வேண்டும். கோவில் வழி பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள பிறப்பு கட்டுப்பாட்டு மையத்தை, விலங்கு நல ஆர்வலர்களின் பங்களிப்புடன் செயல்படுத்த அனுமதிக்க வேண்டும்.
உலகேஸ்வரா நகர் மக்கள்: 2.28 கோடி ரூபாயில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி 2 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. பிரதான குழாயுடன் இணைத்து குடிநீர் வழங்க வேண்டும். கழிவுநீர், வடிகால் வசதி ஏற்படுத்தி, 8 ஆண்டுகளாக பழுதடைந்துள்ள தார் சாலையை சீரமைக்க வேண்டும்.
டி.கே.டி. மில் ஸ்டாப் ஆட்டோ டிரைவர்கள்: 18 ஆண்டுகளாக 35 ஆட்டோக்களை இயக்கி வரும் நிலையில், மினி பஸ்கள் நேரம், வழித்தடம் மாற்றி இயக்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மினி பஸ்களை முறையான வழித்தடம், நேரத்தில் இயக்க வேண்டும்.
இவ்வாறு அளிக்கப்பட்ட மனுக்கள், உரிய நடவடிக்கைக்காக துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டன.
