ADDED : டிச 26, 2024 11:47 PM

திருப்பூர்; போயம்பாளையம் பகுதியில் கஞ்சா கும்பல் நடமாட்டம், போதை நபர்கள் கும்மாளம் உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இங்கு புறக்காவல் நிலையம் உடனடியாகச் செயல்பட வேண்டும்.
அனுப்பர்பாளையம் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட போயம்பாளையம், சக்தி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இப்பகுதிகளில், மொபைல் போன் வழிப்பறி, 'குடி'மகன்கள் மோதல், கஞ்சா விற்பனை கும்பல் நடமாட்டம், போதையில் 'புள்ளிங்கோ' அட்ராசிட்டி ஆகியன சமீப காலமாக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே இத்தகைய சம்பவங்கள் நடந்ததால், அவற்றைத் தடுக்க, போயம்பாளையம் நால் ரோடு அருகே புறக்காவல் நிலையம் அமைக்கும் பணி துவங்கியது. இன்னும் இது பயன்பாட்டுக்கு வரவில்லை. இரவில், கஞ்சா, போதை ஆசாமிகள் குடியிருப்பு பகுதியில் வலம் வந்து, வீடுகள் முன் அமர்ந்து நள்ளிரவு வரை பேசுதல், மது அருந்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை தட்டி கேட்கும் மக்களை தாக்கவும் கும்பல் யோசிப்பதில்லை. இதனால், மக்கள் அச்சத்துடன் வசிக்கின்றனர்.
குடியிருப்பு பகுதியில் 'அட்ராசிட்டி' செய்து வரும் கும்பல்களை கட்டுப்படுத்தவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பணிகள் முடிந்துள்ள புறக்காவல் நிலையத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
--
போயம்பாளையம் நால் ரோடு அருகே அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையம், இன்னும் செயல்படாமல் உள்ளது.