/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயோ காஸ் உற்பத்தி மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! அறவழி போராட்டம்: மாணிக்காபுரம் மக்கள் முடிவு
/
பயோ காஸ் உற்பத்தி மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! அறவழி போராட்டம்: மாணிக்காபுரம் மக்கள் முடிவு
பயோ காஸ் உற்பத்தி மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! அறவழி போராட்டம்: மாணிக்காபுரம் மக்கள் முடிவு
பயோ காஸ் உற்பத்தி மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! அறவழி போராட்டம்: மாணிக்காபுரம் மக்கள் முடிவு
UPDATED : ஜூலை 08, 2025 07:30 AM
ADDED : ஜூலை 08, 2025 12:33 AM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியின் பயோ காஸ் உற்பத்தி மையம் அமைக்கும் திட்டத்துக்கு, மாணிக்காபுரம் பகுதி மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்திடம் சரியான திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் இல்லை. 60 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், ஆங்காங்கே பாறைக்குழிகளிலேயே கொட்டப்பட்டு வருகிறது. சுகாதார சீர்கேட்டால், பாறைக்குழிகளில் குப்பை கொட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்நிலையில், குப்பையிலிருந்து பயோ காஸ் உற்பத்தி செய்யும் மையத்தை, பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரத்தில், 8.18 ஏக்கரில், அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்துக்கு, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50 பேர், கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். பயோகாஸ் உற்பத்தி மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அப்பகுதியினர் கூறியதாவது:
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இட வசதி இல்லாததால், மாணிக்காபுரத்தில், 8.18 ஏக்கர் பூமிதான நிலத்தில், பயோ காஸ் உற்பத்தி மையம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து, பொதுமக்கள் சார்பில், பல்லடம் ஆர்.ஐ., மற்றும் தாசில்தாரிடம் நேரடியாகவும், கலெக்டருக்கு பதிவு தபாலிலும் அனுப்பி வைத்தோம்.
கடந்த மாதம், 18ம் தேதி, 'உங்களைத்தேடி... உங்கள் ஊரில்' திட்ட சிறப்பு திட்ட முகாமில், கலெக்டரிடம் நேரடியாகவும் மனு அளித்தோம். ஆனாலும், எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல், நிலத்தை வகை மாற்றம் செய்வதற்கான நடைமுறைகளை, டி.ஆர்.ஓ., மேற்கொண்டுவருவது கவலை அளிக்கிறது. பயோ காஸ் உற்பத்தி மையம் அமைந்தால், கடும் துர்நாற்றம், காற்று மாசுபாடு காரணமாக, எங்கள் பகுதி முதியவர்கள், குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுவர்.
அந்த இடத்தில் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி, பல ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளித்துவருகிறோம். இந்நிலையில், பயோ காஸ் உற்பத்தி மையம் அமைக்கும் நடவடிக்கைகள் வேதனை தருகின்றன. பூமிதான நிலத்தில், பயோ காஸ் உற்பத்தி மையம் அமைப்பதை கைவிட வேண்டும். அந்த நிலத்தில், வீடு இல்லாத ஏழைகளுக்கு, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால், அனைவரும் திரண்டு, அறவழியில் அடுத்தடுத்த போராட்டங்களை மேற்கொள்வோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பயோ காஸ் உற்பத்தி மையம் அமைந்தால், கடும் துர்நாற்றம், காற்று மாசுபாடு காரணமாக, எங்கள் பகுதி முதியவர்கள், குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுவர்