/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலெக்டர் அலுவலகத்தில் குடியேறிய மக்கள்!
/
கலெக்டர் அலுவலகத்தில் குடியேறிய மக்கள்!
ADDED : ஜன 04, 2024 12:17 AM

திருப்பூர் : கோவில் மற்றும் குளியலறைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, வேலாயுதம்பாளையம் பொதுமக்கள், பாய், சமையல் பாத்திரங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாமளாபுரம் பேரூராட்சி, வேலாயுதம்பாளையம் அருந்தியர் காலனியை சேர்ந்த பொதுமக்கள், 60 பேர், பாய், காலி குடங்கள், சமையல் பாத்திரங்களுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது: வேலாயுதம்பாளையம் அருந்ததியர் காலனியில், 30 குடியிருப்புகள் உள்ளன. கழிப்பிட வசதி இல்லை. திறந்த வெளியையே கழிப்பிடமாக பயன்படுத்துகிறோம். ரோட்டோரங்களில், தனித்தனியே குளியலறை அமைத்துள்ளோம்.
சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகம், ரோட்டை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, மதுரை வீரன் கோவில் மற்றும் எங்கள் குளியலறைகளை அகற்ற நோட்டீஸ் அளித்துள்ளது.
ஆண்டாண்டு காலமாக வழிபட்டுவரும் மதுரை வீரன் கோவிலை இடிக்க கூடாது.
குளியலறைகளை அகற்றினால், அதற்குபதில் வேறு இடத்தில் இடம் ஒதுக்க வேண்டும். இது குறித்து கலெக்டரிடம் ஏற்கனவே மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதனால், பாத்திரங் களுடன் வந்து, கலெக்டர் அலுவலகத்தில் குடியேறியுள்ளாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போலீசார் சமாதானப்படுத்திய போதும், கலெக்டரை நேரில் சந்தித்து முறையிடாமல் நகரமாட்டோம் என கூறி, தாங்கள் கொண்டுவந்த பொருட்களுடன் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே காத்திருந்தனர்.