/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்கள் இயக்கமாக மாற வேண்டும்; கமிஷனர் அழைப்பு
/
மக்கள் இயக்கமாக மாற வேண்டும்; கமிஷனர் அழைப்பு
ADDED : நவ 20, 2025 03:05 AM
திருப்பூர்: திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த, கலந்தாய்வு கூட்டம், திருப்பூர் டவுன்ஹால் அரங்கில் நடந்தது. அதில், பேசிய கமிஷனர் அமித், ''திருப்பூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், மக்கள் இயக்கமாக மாற வேண்டும்'' என்றார்.
அவர் மேலும் பேசியதாவது : திருப்பூரில் குப்பை பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. திட்டம் வெற்றி பெற, குப்பையை தரம் பிரித்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையை தற்போதில் இருந்தே துவங்க வேண்டும்; இது, மக்கள் இயக்கமாக மாற வேண்டும்,'' என்றார்.
மாநகராட்சி சுகாதார குழு தலைவர் கவிதா பேசுகையில், ''குப்பையை கால்வாய் உள்ளிட்ட பொது இடங்களில் கொட்ட வேண்டாம் என, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், மக்கள் கேட்பதில்லை; பாலிதின் கவரில் குப்பையை கட்டி, போகிற வழியில் வீசிவிட்டு செல்கின்றனர். மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்,'' என்றார்.
கவுன்சிலர் முத்துகிருஷ்ணன் பேசுகையில்,''டீக்கடை, ஓட்டல்களில் பாலிதின் கவரில் டீ, காபி, சாம்பார் உள்ளிட்டவற்றை அடைத்துக் கொடுக்க தடை விதிக்க வேண்டும். இரவில், குப்பைத் தொட்டிகள் எம்பராய்டரி கழிவுகள் கொட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். வார்டுகளில், குப்பை தொட்டி இல்லாத நிலை உருவாக்க வேண்டும். விதிமீறும் கடைகள், நிறுவனத்தினர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
கவுன்சிலர் ரவிச்சந்திரன் பேசுகையில்,''திருப்பூரில், 30 ஆண்டுக்கு முன் சாயக்கழிவுநீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. சாயக்கழிவுநீரை சுத்திகரித்து தான் வெளியேற்ற வேண்டும் என மாசுக்கட்டுப்பாடு வாரியம் கூறியது; இது சாத்தியமே இல்லை; தொழில் முடங்கிவிடும் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால், விடா முயற்சி, கண்காணிப்பு, ஆய்வின் வாயிலாக, அது சாத்தியமானது. அதுபோன்று, அனைத்து தரப்பினரும் ஒத்துழைத்தால் குப்பை பிரச்னைக்கும் தீர்வு காண முடியும்,'' என்றார்.
'தேர்தல் மேகம்' வந்திருச்சு... கவுன்சிலர் செந்தில்குமார் கூறுகையில்,''கடந்த, 2001 முதல், கவுன்சிலராக இருக்கிறேன். காலங்காலமாக, பாறைக்குழியில் தான் குப்பை கொட்டப்படுகிறது. தற்போது மட்டும், இப்பிரச்னை பெரிதாக அரசியல் மேகம் சூழ்ந்திருப்பது காரணம். தேர்தல் நெருங்குவதால், இப்பிரச்னையை சிலர் அரசியல் செய்கின்றனர். திருப்பூர் மட்டுமல்ல, நாடு முழுக்க பாறைக்குழியில் தான் குப்பை கொட்டப்படுகிறது.
அங்கெல்லாம் இதுபோல், யாரும் அரசியல் செய்வதில்லை. இருப்பினும், திருப்பூரில், பாறைக்குழியில் தரம் பிரிக்காமல் குப்பையை கொட்டியது தவறு தான். திருத்திக் கொள்கிறோம் என சொல்கிறோம். அதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாமா? இதுகுறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

