/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒளிராத தெரு விளக்குகளால் இருளில் தவிக்கும் மக்கள்
/
ஒளிராத தெரு விளக்குகளால் இருளில் தவிக்கும் மக்கள்
ADDED : அக் 10, 2025 10:16 PM

உடுமலை; உடுமலை நகராட்சியிலுள்ள தெரு விளக்குகள் முறையாக பராமரிக்காததால், இரவு நேரங்களில் பல இடங்களில் தெரு விளக்குகள் ஒளிராமல், இருட்டில் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உடுமலை நகராட்சியில், பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, தளி ரோடு என பிரதான ரோடுகள் மட்டுமின்றி, குடியிருப்புகளிலும், 200க்கும் மேற்பட்ட ரோடுகள் உள்ளன.
நகராட்சி சார்பில், ஏற்கனவே, பிரதான ரோடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில், 3,475 தெரு விளக்குகளும், நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ், பிரதான ரோடுகளின் மையத்தடுப்புகள் மற்றும் ரோட்டோரங்கள் மற்றும், 450 பழைய மின் விளக்குகள் மாற்றுதல் என, 1,276 மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.
தற்போது, நகரில் 4,213 மின் விளக்குகள் உள்ள நிலையில், தெரு விளக்குகள் பராமரிப்பதில் தனியார் நிறுவனமும், நகராட்சியும் அலட்சியம் காட்டி வருவதால், இதில், பெரும்பாலான விளக்குகள் இரவு நேரங்களில் ஒளிர்வதில்லை.
இதனால், பழநி ரோடு, தாராபுரம் ரோடு, அனுஷம் உள்ளிட்ட பெரும்பாலான ரோடுகள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மக்கள் அதிகம் வந்து செல்லும், பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளிலும், தெரு விளக்குகள் முழுமையாக எரிவதில்லை.
எனவே, நகரிலுள்ள தெரு விளக்குகள் முறையாக ஒளிரும் வகையில், பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு பணி மேற்கொள்ள, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.