/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒற்றுமைக்கு இலக்கணமாகத் திகழும் மக்கள்
/
ஒற்றுமைக்கு இலக்கணமாகத் திகழும் மக்கள்
ADDED : ஏப் 26, 2025 11:37 PM

திருப்பூரில் இருந்து மங்கலம் ரோட்டில், கோழிப்பண்ணை பஸ் ஸ்டாப் பகுதியில் அமைந்துள்ளது செந்தில் நகர் குடியிருப்பு பகுதி. திருப்பூர் மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட போது, ஆண்டிபாளையம் ஊராட்சி இத்துடன் இணைக்கப்பட்டது.
ஆண்டிபாளையம் ஊராட்சியில் வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதியில் மூன்று புறங்களிலும் விவசாய தோட்டங்கள் சூழ்ந்த பகுதியில் இக்குடியிருப்பு உதயமானது.
முதல் கட்டத்தில் 50 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டு அதன் உரிமையாளர்கள் இங்கு குடியேறினர். பின், மீண்டும் செந்தில் நகர் விரிவு பகுதி மேலும் 50 வீடுகளுடன் அமைந்தது. சி.பி., அவென்யூ என, மேலும் 50 வீடுகள்உருவானது. இந்த மூன்று குடியிருப்பு பகுதிகளில் வசிப்போர் இணைந்து உருவாக்கியது தான் செந்தில் நகர் குடியிருப்போர் நலச்சங்கம்.
இதன் தலைவராக தற்போது மயில்வாகனன், செயலாளராக விஜயன், பொருளாளர் வேலாயுதன் ஆகியோர் உள்ளனர். சங்க நிர்வாகிகளாக அதன் உறுப்பினர்கள் சுழற்சி முறையில் ஆண்டுக்கு ஒரு முறை போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு, சங்க நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றனர்.
விசேஷங்களுக்காக சமுதாயக்கூடம்
தங்கள் பகுதி நிறைகள் மற்றும் குறைகள் குறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது: மூன்று குடியிருப்புகளுக்கும் தனித்தனியாக ரிசர்வ் மற்றும் பொதுப் பயன்பாட்டுக்கான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. சங்க செயல் பாடுகளில் சிலவற்றை முக்கிய மானவையாக குறிப்பிடலாம்.
செந்தில் நகர் பகுதியின் ரிசர்வ் சைட்டில், சங்க அலுவலகம் மற்றும் சிறிய அளவில் ஒரு சமுதாய கூடமும் அமைத்துள்ளோம். இங்கு குடியிருப்போர் வீடுகளில் சிறிய அளவிலான விசேஷ நிகழ்வுகளை இதில் நடத்திக் கொள்கிறோம்.
விழாக்கள் கோலாகலம்
ஆண்டு தோறும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற விழாக்கள் சங்கம் சார்பில் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து கொண்டாடி வருகிறோம். நமது நாள் விழா என்ற பெயரில் இந்த நாட்களில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், பரிசளிப்பு, பொது விருந்து நடத்துகிறோம்.
மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு
இதற்கு முன் ரிசர்வ் சைட்டை தனியார் நிறுவனம் ஒன்று ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்தது. சங்கத்தின் முயற்சியால் அதை மீட்டு பாதுகாப்பு செய்துள்ளோம்.
நுழைவாயிலில் 'செக் போஸ்ட்'
குடியிருப்பு பகுதிக்கு பிரதான நுழைவாயில் உள்ள பகுதியில் 'செக் போஸ்ட்' அமைத்து, காவலாளிகள் நியமிக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். வெளி நபர்கள் நடமாட்டம் என்பதற்கே இடமில்லை. சங்கத்தின் ஏற்பாட்டில் நமக்கு நாமே திட்டத்தில் வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக தன்னார்வ இயற்கை ஆர்வலர் அமைப்புகளுடன் இணைந்து குடியிருப்பு பகுதியில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் எண்ணம் உள்ளது.
கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டம்
இவை தவிர, அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் நுாலகம் அமைக்கும் திட்டமும் உள்ளது. அனைத்து வீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, அதை சங்க அலுவலகத்தில் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யவுள்ளோம். சில மாதங்கள் முன்னர் வரை, இரவு நேரங்களில் போலீசார் 'பீட்' அமைத்து இங்கு ரோந்து வந்து செல்வர். தற்போது இந்த நடைமுறை கைவிடப்பட்டுவிட்டது. இதை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்.
தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படவில்லை
பாதாள சாக்கடை திட்டத்துக்கு பிரதான குழாய்கள் பதிக்கப்பட்டுவிட்டன. இன்னும் வீட்டு இணைப்புகள் வழங்கப்படாமல் உள்ளது. இதற்காக தோண்டிய ரோடுகள் இன்னும் சீரமைக்காமல் உள்ளது. இதனால், போக்குவரத்துக்கு கடும் அவதி நிலவுகிறது. இதனை சீரமைக்க வேண்டும்.
இப்பகுதியில் உள்ள 10 தெருக்களிலும் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் ஒளி அளவு மிகவும் குறைவாக உள்ளது. கூடுதல் திறன் கொண்ட விளக்குகள் பொருத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஒற்றுமையுடன் தங்கள் குடியிருப்பு பகுதி நலனுக்காக செயல்படும் செந்தில் நகர் குடியிருப்போரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!