/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடாத மழை வந்தாலும் மனு கொடுப்பதை விடாத மக்கள்
/
அடாத மழை வந்தாலும் மனு கொடுப்பதை விடாத மக்கள்
ADDED : மே 26, 2025 11:51 PM

திருப்பூர்; ஜமாபந்தி மற்றும் மழை காரணமாக, குறைகேட்பு கூட்டத்துக்கு நேற்று, பொதுமக்கள் வருகை சற்று குறைந்து காணப்பட்டது.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்றுநடைபெற்றது. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ் ஆகியோர், மக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
அவிநாசி, சேவூர் ரோடு, சாலையோர வியாபாரிகள்:
சேவூர் ரோட்டில், வேளாண் அலுவலகம் மற்றும் ஆர்.ஐ., அலுவலகம் அருகே, சாலையோரம் காய்கறி மற்றும் பழக்கடைகள் வைத்து வியாபாரம் செய்துவருகிறோம்.
வெயில் மற்றும் மழையை சமாளிக்க, தார்பாய் கட்டியுள்ளோம். எங்கள் கடைகளால், எவ்வித போக்குவரத்து இடையூறும் ஏற்படவில்லை. இந்நிலையில், 28ம் தேதிக்குள் (நாளை) கடைகளை காலி செய்யுமாறு, நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மத்திய அரசு எங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கியுள்ளது. வங்கி கடனை நாங்கள் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறையும், சமூக ஆர்வலர்களும் கடைகளை அகற்ற தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது கவலை அளிக்கிறது. எங்கள் கோரிக்கைகளை கலெக்டர் பரிசீலிக்க வேண்டும். புதிய ரோடு பணி மேற்கொள்வதாக இருந்தாலும், சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கி, பாதுகாக்க வேண்டும்.
இடுவாய் பகுதி பொதுமக்கள்:
திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சி, எம்.ஜி.ஆர்., நகரில், க.ச.எண். 178/1 ல், பல ஆண்டுகளாக வசித்துவரும், 100 குடும்பங்களுக்கு, கடந்த 2008 ல் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அவர்களில், 11 பேருக்கான பட்டாவில், பயனாளி பெயர் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும், பெயர் திருத்தம் செய்துதரவில்லை. பட்டாவில் பெயர் திருத்தம் செய்து தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலையை சேர்ந்த மூதாட்டி, அவரின் கணவர், மகள்கள்:
எனக்கு நான்கு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கணவர் ராமமூர்த்தி, 97, மன நலம் பாதிக்கப்பட்டுள்ளார். எங்களை கவனித்துக்கொள்வதாக உறுதி அளித்த மகன், எனக்கு சொந்தமான மூன்றரை சென்ட் நிலம் மற்றும் 35 சென்ட் நிலத்தை, தனது பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டார்.
நிலங்களை விற்ற தொகையில், உடுமலை பெரியகடை வீதியில் சொந்தவீடு கட்டி, குடும்பத்தோடு வசித்துவருகிறார். வயதான எங்களை, மகனும், மருமகளும் கவனிப்பதில்லை. வீட்டைவிட்டு அடித்து துரத்திவிட்டனர். அருகாமையில் உள்ள உறவினர் வீட்டில் நாங்கள் அடைக்கலம் புகுந்துள்ளோம். உறுதி அளித்தபடி, மகன், எங்களை பராமரிக்க வேண்டும். இல்லையெனில், எங்கள் நிலத்தை, எங்களுக்கே மீட்டுத்தர வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒன்பது தாலுகாக்களிலும், கடந்த 20ம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெற்றுவருகிறது. குறைகேட்பு கூட்டத்தைவிட ஜமாபந்தி மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும் என மக்கள் நம்புகின்றனர். பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, உட்பிரிவு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை, ஜமாபந்தியில் அளித்துவருகின்றனர்.
கோடை விலகி, திருப்பூர் நகர பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்துவருகிறது. நேற்றும் காலை முதலே, அவ்வப்போது துாறல் மழை பெய்தது. ஜமாபந்தி, மழை காரணமாக, குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்க நேற்று பொதுமக்கள் வருகை குறைந்து காணப்பட்டது. வழக்கமாக, 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்படும் நிலையில், நேற்று பொதுமக்களிடமிருந்து 255 மனுக்களே பெறப்பட்டன. மக்கள் வருகை குறைவால், கலெக்டர் அலுவலக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.