/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கரைபுரண்டோடியது மக்கள் உள்ளங்களில்... மகிழ்ச்சி வெள்ளம்! தீபாவளி 'ஷாப்பிங்'; திக்குமுக்காடிய மாநகரம்
/
கரைபுரண்டோடியது மக்கள் உள்ளங்களில்... மகிழ்ச்சி வெள்ளம்! தீபாவளி 'ஷாப்பிங்'; திக்குமுக்காடிய மாநகரம்
கரைபுரண்டோடியது மக்கள் உள்ளங்களில்... மகிழ்ச்சி வெள்ளம்! தீபாவளி 'ஷாப்பிங்'; திக்குமுக்காடிய மாநகரம்
கரைபுரண்டோடியது மக்கள் உள்ளங்களில்... மகிழ்ச்சி வெள்ளம்! தீபாவளி 'ஷாப்பிங்'; திக்குமுக்காடிய மாநகரம்
ADDED : அக் 19, 2025 09:18 PM

திருப்பூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உற்சாகம் கரைபுரண்டோட, திருப்பூர் கடைவீதிகளில் பொதுமக்கள் குடும்ப சகிதமாக வந்து 'ஷாப்பிங்' செய்து சென்றனர்.
பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில், தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களும் வசிக்கின்றனர்; 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். தீபாவளி பண்டிகை, திருப்பூரில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
தொழிலாளர்களுக்கு போனஸ் கிடைத்ததும், கடந்த, 10ம் தேதிக்கு பிறகு, திருப்பூர் கடைவீதிகளில் வியாபாரம் களைகட்டியது. வழக்கமாக, ஞாயிற்றுக்கிழமை விற்பனையில் பரபரப்பாக காணப்படும் கடைவீதிகளில், கடந்த ஒரு வாரமாக மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஜவுளி எடுக்கும் வாடிக்கையாளருக்கு, எவர்சில்வர், தரமான பிளாஸ்டிக் பக்கெட் மற்றும் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டதால், ஜவுளிக்கடைகளில் விற்பனை களைகட்டியது. பகல் நேரம் முழுவதும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
பர்னிச்சர் கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள், மொபைல் போன் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகளில் கடந்த ஒருவாரமாக கூட்டம் அதிகம் காணப்பட்டது.
கடைசி நாள் என்பதால், சுற்றுப்பகுதிகளை சேர்ந்த மக்கள், இரண்டாம் கட்ட ஷாப்பிங் செய்ய, நேற்று திருப்பூர் வந்திருந்தனர்.
காலை, 10:00 மணி முதல், முக்கிய ரோடுகளில் வாகன நெரிசல் அதிகரித்தது; போலீசார், 'மைக்' மூலம், எச்சரிக்கையுடன் இருக்குமாறு, தொடர்ந்து அறிவிப்பு செய்தபடி, கண்காணித்தனர். போக்குவரத்து நெரிசலை தீர்க்க, ஏராளமான போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
'பார்க்கிங்' வசதி செய்யப்பட்டிருந்ததால், நெரிசல் குறைந்தது; இருப்பினும், குமரன் ரோட்டில் தொடர்ந்து வாகன போக்குவரத்து அதிகம் காணப்பட்டது. நேற்று காலை முதல், பட்டாசுக்கடை மற்றும் ஸ்வீட் கடைகளில், மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
தீபாவளி பண்டிகைக்கு பரிசு வழங்க ஏதுவாக, அரை கிலோ பாக்கெட்டுகளாக, பல்வகை இனிப்புகள் அடங்கிய 'கிப்ட்' பாக்ஸ் விற்பனை பரபரப்பாக நடந்தது. பட்டாசு கடைகளில், அனைத்து பட்டாசுகளும் அடங்கியுள்ள 'பாக்ஸ்' விற்பனை அதிகம் நடந்தது.
எவ்வளவுதான் போக்குவரத்து நெரிசல், நெருக்கடி இருந்தாலும், குடும்பத்துடன் வந்து 'ஷாப்பிங்' செய்து கலகலப்பாக சென்று வருவதை பார்க்க முடிந்தது.
நேற்று மாலை துவங்கி, குடும்பத்தினர் பலர் வீடுகள் முன்பு பட்டாசு வெடித்தும், மத்தாப்பூ, புஸ்வாணம் போன்றவற்றை கொளுத்தியும் மகிழ்ந்தனர். தீபாவளி கோலாகலம் நேற்றே துவங்கிவிட்டது.