/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்திமலை வண்ண மீன் காட்சியகத்தை விரிவுபடுத்தணும்! மீன் வளர்ச்சி கழகத்துக்கு மக்கள் கோரிக்கை
/
திருமூர்த்திமலை வண்ண மீன் காட்சியகத்தை விரிவுபடுத்தணும்! மீன் வளர்ச்சி கழகத்துக்கு மக்கள் கோரிக்கை
திருமூர்த்திமலை வண்ண மீன் காட்சியகத்தை விரிவுபடுத்தணும்! மீன் வளர்ச்சி கழகத்துக்கு மக்கள் கோரிக்கை
திருமூர்த்திமலை வண்ண மீன் காட்சியகத்தை விரிவுபடுத்தணும்! மீன் வளர்ச்சி கழகத்துக்கு மக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 31, 2025 09:56 PM

உடுமலை; திருமூர்த்திமலை வண்ண மீன் காட்சியகத்தை விரிவுபடுத்தி, தேவையான பணியாளர்களை நியமிப்பதுடன், சுற்றுலா பயணியருக்கு தேவையான வசதிகளை மீன்வளர்ச்சி கழகத்தினர் ஏற்படுத்த வேண்டும் என, தமிழக அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர். உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை, ஆன்மிக மற்றும் சுற்றுலா தலமாக உள்ளது. பல ஆண்டுகளாக சுற்றுலா சார்ந்த எவ்வித வசதிகளும் அப்பகுதியில் மேம்படுத்தப்படாமல் உள்ளது.
பொதுப்பணித்துறையினர் பூங்கா அமைக்கவில்லை; பேரூராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சித்துறையினர் படகுத்துறையை முடக்கி வைத்துள்ளனர். பஞ்சலிங்க அருவியிலும் பல்வேறு மேம்பாட்டு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சுற்றுலா மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் நடத்தப்படும், ஆடிப்பெருந்திருவிழாவை வருவாய்த்துறையினரும் நடத்துவதில்லை.
இவ்வாறு, திருமூர்த்திமலையை புறக்கணிக்கும் அரசுத்துறைகள் பட்டியலில், மீன்வளர்ச்சி கழகமும் இணைந்துள்ளது. இக்கழகம் சார்பில், திருமூர்த்தி அணை, படகுத்துறை அருகே, 2004ல், வண்ண மீன் காட்சியகம் அமைக்கப்பட்டது.
பல்வேறு பகுதிகளிலிருந்து திருமூர்த்திமலைக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு பொழுதுபோக்கு அம்சமாகவும், மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும், வண்ண மீன் காட்சியகம் செயல்பட்டு வந்தது.
பல வகையான கோல்டன் பிஷ், கவுரா, சிக்லெட்ஸ், கப்பிஸ், இந்தியன் காட் பிஷ், சர்க்கர் கேட், பாராட் பிஷ், பிரனா, விலாங்கு, பார்ப், ஐபினோ, சார்க், ஏஞ்சல், அரவணா, பிளவர் பாண்ட் பிஷ், பெதர் பின், டெட்ராஸ், கம்பூசியா, ஆஸ்கர் உட்பட சிறப்பம்சங்கள் மிக்க பல்வேறு ரக, வண்ண மீன்களும், அரிய வகை மீன்களும் தொட்டிகளில், வண்ண விளக்குகளுடன், அழகாக காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும், ஒவ்வொரு மீனின் பெயர்கள், அது குறித்த விபரங்கள் கொண்ட தகவல் பலகையும் வைக்கப்பட்டது.
சுற்றுலா பயணியர் ஏமாற்றம் தற்போது வண்ண மீன் காட்சியகம் போதிய பணியாளர்கள் இல்லாமல் அடிக்கடி பூட்டி வைக்கப்படுகிறது. இதனால், திருமூர்த்திமலைக்கு வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.
படகுத்துறையும் செயல்படாமல் அருகிலுள்ள வண்ண மீன் காட்சியகமும் பூட்டியே கிடப்பது அனைத்து தரப்பினரையும் அதிருப்தியடைய செய்கிறது.
தொடர்ந்து புறக்கணிப்பு இது குறித்து சமூக ஆர்வலர்கள் சார்பில் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனு:
சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களில், திருமூர்த்திமலை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. வண்ண மீன்கள் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது.
இத்தகைய மீன்குஞ்சுகள் வாங்க, பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் செல்கின்றனர். முன்பு வண்ண மீன் காட்சியகத்தில், வண்ண மீன் குஞ்சுகளும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
எனவே, திருமூர்த்திமலை வண்ண மீன் காட்சியகத்தை விரிவுபடுத்தி, தேவையான பணியாளர்களை நியமிக்க வேண்டும். மீன் குஞ்சுகள் விற்பனை செய்வதால், வருவாயும் கிடைக்கும்.
இது குறித்து மீன் வளர்ச்சி கழகத்தினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமூர்த்தி அணையில், மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு வளர்க்கப்படுகிறது. இங்கு பிடிபடும் மீன்கள் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்புகின்றனர்.
விடுமுறை நாட்களில், இந்த மீன்களை கொண்டு உணவு தயாரித்து, சுற்றுலா பயணியருக்கு விற்பனை செய்யும் வகையில், 'பிஷ் புட் கோர்ட்' அமைக்க வேண்டும்.
இல்லாவிட்டால் வண்ண மீன் காட்சியகத்தின் பராமரிப்புக்கு கூட வருவாய் இல்லாமல், இருக்கும் ஒரே காட்சியகத்தையும் மூட வேண்டிய சூழல் உருவாகும்.
இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.