ADDED : அக் 16, 2025 11:29 PM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், 343 தற்காலிகப் பட்டாசுக்கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பட்டாசு விற்பனை நாளை முதல் களைகட்டும் என்று, விற்பனையாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தீபாவளியென்றாலே, பட்டாசு வெடிப்பது பிரதானமான ஒன்று; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில், பல வகைகளில் இந்தாண்டு பட்டாசு தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தீபாவளியையொட்டி, தற்காலிக பட்டாசு கடைகளுக்கு, 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை கொடுத்திருந்தனர். மாநகரில், 140 பேர்; புறநகரில் 204 என, 343 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போலீசார், தீயணைப்பு துறையினரின் வழிகாட்டுதல் படி கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கடைக்காரர்களுக்கு
அறிவுரைகள்
தீபாவளிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு பாதுகாப்பில் மிகுந்த கவனத்தைக் கொண்டு போலீசார் பல்வேறு கெடுபிடிகளை விதித்து, அன்றாடம் கண்காணித்து வருகின்றனர். கடைகள் அமைக்கப்பட்ட இடத்தில் டிரான்ஸ்பார்மர் இருக்கக்கூடாது, தீ தொடர்பான பயன்பாடு உள்ள டீக்கடை, உணவகங்கள் இருக்க கூடாது. மண்டபங்களில் திறந்த வெளியில் அமைக்க வேண்டும். பட்டாசுகளை மொத்தமாக வாங்கி இருப்பு வைக்கக்கூடாது. பட்டாசு தீர, தீர கடைக்கு எடுத்து சென்று வியாபாரம் செய்ய வேண்டும்.
மெழுகுவர்த்தி, விளக்கு, தாழ்ந்த நிலையில் பல்புகளை வைக்கக்கூடாது. வெடிகளை வெடித்து காட்டக்கூடாது. மின் கசிவு தொடர்பாக ஏற்படும் விபத்தை தவிர்க்க, அன்றைய தினம் வியாபாரம் முடிந்தவுடன் செல்லும் போது, மெயினை ஆப் செய்து விட்டு செல்ல வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். விபத்தில்லாமல், பட்டாசுகளை எப்படி வெடிப்பது போன்ற விழிப்புணர்வு அறிவிப்புகள் கடைகள் முன்பு வைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை முதல் களைகட்டும்
பட்டாசு கடை விற்பனையாளர்கள் அனுமதி பெற்று கடைகளை மும்முரமாக அமைத்து வருகின்றனர். 'இன்று மாலை முதல் மக்கள் வருகையை எதிர்பார்க்கிறோம். கடைசி இரு நாட்களில் வியாபாரம் நன்றாக இருக்கும். நாளை முதல் பட்டாசு வியாபாரம் களைகட்டும்' என எதிர்பார்ப்பில் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.