/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இச்சிப்பட்டியில் குப்பை கொட்ட அனுமதி ரத்து
/
இச்சிப்பட்டியில் குப்பை கொட்ட அனுமதி ரத்து
ADDED : ஜூலை 31, 2025 11:23 PM
பல்லடம்; பல்லடம் அடுத்த இச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள கைவிடப்பட்ட பாறைக்குழி ஒன்றில், திருப்பூர் மாநகராட்சியின் கழிவுகள், குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் இரண்டு நாள் போராட்டத்தை தொடர்ந்து, பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் சபரி, இனி, இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படாது என உறுதியளித்து, கையெழுத்திட்டு கொடுத்தார். இந்நிலையில், ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம் மாநகராட்சிக்கு வழங்கிய அனுமதியை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சியில் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகள், குப்பைகள் போக, மீதமுள்ள குப்பைகளை அறிவியல் முறைப்படி மேலாண்மை செய்ய வேண்டி, பல்லடம் அடுத்த இச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள பயன்பாடற்ற பாறைக்குழியில் கொட்டி மேலாண்மை செய்ய உத்தரவிடப்பட்டது. இதன்படி, குப்பைகளை எடுத்துச் சென்ற மாநகராட்சி லாரிகளை சிறைபிடித்த அப்பகுதி பெண்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், அப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதால், விமான பயிற்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று, சூலுார் விமானப் படைத்தளத்தில் இருந்து வந்த அலுவலர்களும், குப்பை கொட்டும் அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தினர். எனவே, பல்லடம் தாசில்தாரின் அறிக்கையின்படி, இச்சிப்பட்டியில் உள்ள பயன்பாடற்ற பாறைக்குழியில் குப்பைகள் கழிவுகளை கொட்டி மேலாண்மை பணிகளை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதம், திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் மற்றும் பல்லடம் தாசில்தார் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

