/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வளர்ப்பு நாய் உரிமம்; ஊராட்சிகள் அறிவிப்பு
/
வளர்ப்பு நாய் உரிமம்; ஊராட்சிகள் அறிவிப்பு
ADDED : அக் 25, 2024 10:35 PM
திருப்பூர் : தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், பல இடங்களில் தெரு நாய்கள் கடித்து வளர்ப்பு ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் பலியாகின்றன. இதில், பல இடங்களில் வளர்ப்பு நாய்களும், தெரு நாய்களாக மாறி, கோழி, ஆடுகளை கடிக்கும் செயல் நடக்கிறது.
'பேட்ஜ்' கட்டாயம்
அப்பகுதியில் உள்ள, 15க்கும் மேற்பட்ட ஊராட்சி நிர்வாகங்கள் வெளியிட்ட பொது அறிவிப்பு: ஒவ்வொரு அரையாண்டு துவக்கத்தின் முதல், 30 நாட்களுக்கு வளர்ப்பு நாய்களின் உரிமையாளர் அல்லது பாதுகாவலர், உரிமம் வழங்குவதற்கு அல்லது உரிம புதுப்பிப்பு செய்வதற்கு கிராம ஊராட்சியில் விண்ணப்பிக்க வேண்டும். ஊராட்சி சார்பில் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பம் வழங்கப்படும். ஊராட்சி சார்பில் வழங்கப்படும் 'பேட்ஜ்', வளர்ப்பு நாய்களின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருக்க வேண்டும்.
30 நாட்கள் கெடு
பொது அறிவிப்பு செய்யப்பட்ட, 30 நாட்களுக்குள், நாயின் உரிமையாளர் அல்லது பாதுகாவலர், ஊராட்சி செயல் அலுவலரிடம் விண்ணப்பித்து, உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், 'பேட்ஜ்' அணியாத நாய்கள் சுற்றித்திரிந்தால், செயல் அலுவலர் அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட நபரால் நாய்கள் கைப்பற்றப்படும்.
ரேபிஸ் மற்றும் வெறிநாய்க்கடி போன்ற அசாதாரண சூழ்நிலையின் போது, தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ், பொது சுகாதார துறையுடன் இணைந்து நாய்களை கைப்பற்றி நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சியில் உரிமம் பெறாமல் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த, பொது சுகாதாரத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.