/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விசைத்தறிகளுக்கு சோலார் வைகோவிடம் மனு
/
விசைத்தறிகளுக்கு சோலார் வைகோவிடம் மனு
ADDED : செப் 02, 2025 11:11 PM

பல்லடம்; திருப்பூரில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க, வந்த ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவிடம், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் பூபதி தலைமையிலான நிர்வாகிகள், அளித்த மனு விவரம்:
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 2 லட்சம் விசைத்தறிகள் வாயிலாக, தினமும் ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொரு முறை மின்கட்டணம் உயரும்போதும், கட்டண குறைப்புக்காக போராட வேண்டிய சூழல் உள்ளது. ஏற்கனவே கூலி பிரச்னையால், நாங்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், வாங்கும் கூலியில், 3ல் ஒரு பங்கு மின்கட்டணத்துக்கே செல்கிறது.
எதிர்வரும் காலங்களில், மின் கட்டணத்தை குறைத்தால் தான் நாங்கள் தொழில் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. கடந்த, 2017ல், பவர் டெக்ஸ் இந்தியா திட்டத்தின் கீழ், சோலார் பேனல்கள் அமைத்து, சாதாரண விசைத்தறிகளை வெற்றிகரமாக இயக்கி காண்பித்தோம்.
தொழிலை அழிவிலும், நழிவிலும் இருந்து காப்பாற்றிய பவர் டெக்ஸ் இந்தியா திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
நெட் மீட்டர் பொருத்தி, சாதாரண விசைத்தறி ஒன்றுக்கு, 12 கி.வா., சோலார் மின்சாரம் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும். இதற்கு, மத்திய அரசு, 50 சதவீத மானியம் வழங்கினால், விசைத்தறிக் கூடங்களின் கூரைகளில் சோலார் பேனல்கள் அமைத்துக் கொள்வோம். இதிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை, வழக்கமாக உபயோகிக்கும் மின்சாரத்தில் கழித்துக் கொள்வதால், எங்களது சுமை குறையும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.