/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தபால் அலுவலக சேவை விரிவு: மத்திய அமைச்சருக்கு மனு
/
தபால் அலுவலக சேவை விரிவு: மத்திய அமைச்சருக்கு மனு
ADDED : நவ 09, 2025 11:48 PM

பல்லடம்: பல்லடம் தபால் அலுவலக சேவைகளை விரிவுபடுத்த வேண்டும் என, பா.ஜ., சார்பில், மத்திய அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட பா.ஜ., தலைவர் சீனிவாசன் பரிந்துரையின் பேரில், பா.ஜ., மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு அனுப்பியுள்ள மனு:
பல்லடத்தில், ஜவுளி தொழில், கறிக்கோழி உற்பத்தி தொழில் உள்ளிட்டவை பிரதானமாக உள்ளது. பல ஆயிரம் தொழிலாளர்களும், இப்பகுதியில் தங்கி வேலை பார்க்கின்றனர். தொழில் துறையினர் மட்டுமன்றி, அதிகப்படியான தொழிலாளர்களும், தபால் அலுவலக சேவைகளை பயன்படுத்தி பயனடைந்து வருகின்றனர்.
தொழில் ரீதியாக வளர்ந்து வரும் இப்பகுதியில் உள்ள தபால் அலுவலகம், 60 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்தது. இந்த தபால் அலுவலக கட்டடம், மோசமான நிலையில் உள்ளது. எனவே, இந்த தபால் அலுவலகத்தை தரம் உயர்த்தி,
புதிய தபால் அலுவலக கட்டடத்தை அமைக்க வேண்டும். மேலும், தொழில் துறையினர், தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, காலை, 9:30 முதல் மாலை, 4:30 மணி வரை உள்ள நேரத்தை; காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை செயல்படும் வகையில் சேவைகளை விரிவுபடுத்த வேண்டும். இத்துடன், தபால் அலுவலக வளாகத்திலேயே, ரயில் டிக்கெட் முன்பதிவு மையமும் அமைக்க வேண்டும். இதன் மூலம், ஏராளமானோர் பயனடைவார்கள் என்பதால், கோரிக்கைகளை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

