/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்தி அணையிலிருந்து உயிர் தண்ணீர்; அரசுக்கு வலியுறுத்தி மனு
/
திருமூர்த்தி அணையிலிருந்து உயிர் தண்ணீர்; அரசுக்கு வலியுறுத்தி மனு
திருமூர்த்தி அணையிலிருந்து உயிர் தண்ணீர்; அரசுக்கு வலியுறுத்தி மனு
திருமூர்த்தி அணையிலிருந்து உயிர் தண்ணீர்; அரசுக்கு வலியுறுத்தி மனு
ADDED : செப் 24, 2024 11:41 PM

உடுமலை : பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தில், கோவை, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட, 94,068 ஏக்கர் மற்றும் முதலாம் மண்டல பாசனத்தில், 94,521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்தாண்டு, இந்த இரு மண்டல பாசன பகுதிகளுக்கும், திருமூர்த்தி அணையிலிருந்து, பல்வேறு காரணங்களால், முழுமையாக பாசன நீர் வழங்கப்படவில்லை.
காண்டூர் கால்வாய் பராமரிப்பு, தொகுப்பு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், ஒன்றரை சுற்று மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டது.
இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது; நீண்ட கால பயிர்களும் பாதித்தன.இந்நிலையில், பாசனப்பகுதிகளில், தென்மேற்கு பருவமழையும் பெய்யாமல், வறட்சி துவங்கியுள்ளது. நீண்ட கால பயிரான தென்னைக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
எனவே, திருமூர்த்தி அணையிலிருந்து பாசனப்பகுதிக்கு உயிர் தண்ணீர் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, ஏ.நாகூர் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில், தமிழக அரசுக்கும், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளருக்கும் அனுப்பியுள்ள மனு:
நான்காம் மண்டல மற்றும் முதலாம் மண்டல பாசனத்துக்கு கடந்தாண்டு, ஒன்றரை சுற்றுகள் மட்டுமே பாசன நீர் வழங்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பெய்யாமல், வறட்சி நிலவுகிறது.
கால்நடைகளுக்கு கூட தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. தற்போது பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில், நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது.
வறட்சி மற்றும் குறைந்த சுற்றுகள் தண்ணீர் வழங்கியதை கருத்தில் கொண்டு, நான்காம் மற்றும் முதலாம் மண்டல பாசன பகுதி நிலங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து ஒரு சுற்று உயிர் தண்ணீர் வழங்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.