/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனுக்கள் குவிந்தது... குறைகள் தீருவது எப்போது?
/
மனுக்கள் குவிந்தது... குறைகள் தீருவது எப்போது?
ADDED : ஜூலை 21, 2025 11:49 PM

திருப்பூர்; என்னதான் குறைகேட்பு கூட்டத்தில் கத்தைகத்தையாக மனுக்கள் பெறப்பட்டாலும், துறை சார்ந்த அரசு அதிகாரிகள் மனசு வைத்தால் மட்டுமே மக்கள் குறை தீரும்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகாராஜ், தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பக்தவத்சலம் ஆகியோர், மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டனர். அம்மனுக்கள், உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, துறை சார்ந்த அரசு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மதுக்கடை காலியாகுமா? எஸ்.ஆர்., நகர் வடக்கு குடியிருப்போர் நலச்சங்கத்தினர்:
திருப்பூர் மாநகராட்சி, 38வது வார்டு, மங்கலம் ரோட்டிலுள்ள எஸ்.ஆர்., நகரில், டாஸ்மாக் மதுக்கடை (எண்:1925) அமைத்துள்ளனர். இதனால், வீடுகள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
குற்றங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதால், மதுக்கடையை எங்கள் பகுதியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். கடந்த (ஜுன்) 18ம் தேதி, எவ்வித முன்னறிவிப்புமின்றி மதுக்கடையை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்ததால், போலீசார் எங்களை கைது செய்து, மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுவித்தனர். பொதுமக்களின் எதிர்ப்பால் இன்றுவரை கடை திறக்கப்படாமல் உள்ளது. மதுக்கடைக்கான கட்டுமானங்களை உடனடியாக அப்புறப்படுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.
மருந்துகள் கிடைப்பதில்லை திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு :
திருப்பூர் மாநகராட்சி, 57வது வார்டு, மூகாம்பிகை நகர் பகுதியில் செயல்பட்டுவரும் நகர்ப்புற நல வாழ்வு மையத்தில், போதிய மருந்துகள் இருப்பு இல்லை. நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மாத்திரை வாங்க, பலவஞ்சிபாளையம், வீரபாண்டி சுகாதார நிலையங்களுக்கு செல்ல வேண்டும். அங்கும் கிடைப்பதில்லை. மூகாம்பிகை நகர் நல வாழ்வு மைய வளாகத்துக்கு, கதவுகள் பொருத்தப்படாததால், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் புகுந்து அட்டகாசம் செய்கின்றனர். திருக்குமரன் நகர், அமராவதி நகர், காளிகுமரன் நகர் பகுதிகளில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
சாக்கடை கால்வாய் இல்லாததால், கழிவுநீர், பி.ஏ.பி., வாய்க்காலில் தேங்கி நிற்கிறது. அப்பகுதிகளில் விரைந்து சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வசதிகளற்ற மருத்துவமனை அவிநாசி ஒன்றிய மா.கம்யூ.,:
அவிநாசி ஒன்றியம், 21 ஊராட்சி, 2 நகராட்சிகளை கொண்டது. ஏறத்தாழ, 3.5 லட்சம் பேர் வசிக்கின்றனர். அவிநாசியை நகரை ஒட்டி, 25 கி.மீ., துாரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கின்றன. விபத்தில் சிகிச்சை, சளி, காய்ச்சல், நாய்க்கடி, சர்க்கரை நோய், ரத்த பரிசோதனை என எல்லாவகையான சிகிச்சைகளுக்கும், மக்கள் அவிநாசி அரசு மருத்துவமனையை சார்ந்துள்ளனர். ஆனால், போதிய வசதிகள் இல்லை.
எனவே, அவிநாசி அரசு மருத்துவமனையை, நவீன வசதிகளுடன் கூடியமருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். தாய் - சேய் நல விடுதியை, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
தலைவர்கள் வேடமிட்டு வந்து மனு தமிழ்நாடு முக்குலத்தோர் பசும்பொன் தேவர் பேரவையினர், குழந்தைகளுக்கு, முத்துராமலிங்க தேவர், மருது சதோதரர்கள், வேலு நாச்சியார், புலித்தேவன், சுபாஷ்சந்திரபோஸ் வேடமிட்டு, கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். 'கள்ளர் சீரமைப்பு துறையின் கீழ் செயல்படும், 55 கள்ளர் சீரமைப்பு விடுதிகளை, சமூக நீதி விடுதி என பெயர் மாற்றம் செய்வதை தமிழக அரசு திரும்பப்பெறவேண்டும்' என மனு அளித்தனர்.
மகனுடன் தந்தை மனு திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்தவர், பிரேம்குமார்; பனியன் நிறுவன தொழிலாளி. இவரது இரண்டாவது மகன், உடலில் தோல் உரியும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். குறைகேட்பு கூட்டத்துக்கு மகனுடன் வந்து மனு அளித்த பிரேம் குமார் கூறியதாவது:
முந்தைய கலெக்டர்களான வினீத்,கிறிஸ்துராஜ் ஆகியோரிடம் மனு அளித்ததையடுத்து, எனது மகனுக்கு மருத்துவ உதவி, பள்ளியில் இடம் கிடைத்தது; மாற்றுத்திறனாளியாக பதிவு செய்யப்பட்டு, மாதந்திர உதவித்தொகையும் கிடைத்துவருகிறது. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள எங்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, கைகொடுக்கவேண்டும், என்றார்.
குறையாத மனுக்கள் திருப்பூர் மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முதல்கட்ட முகாம்கள், கடந்த 15 ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. அனைத்து அரசு துறை சார்ந்த 46 சேவைகள், முகாமில் ஒரே இடத்தில் வழங்கப்படுகிறது. ஆனாலும் கூட, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு, மனு அளிக்க மக்கள் வருகை குறையவில்லை. இலவச வீட்டுமனை பட்டா, அடிப்படை வசதிகள், பஸ் வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து மொத்தம்,469 மனுக்கள் பெறப்பட்டிருந்தன.
மகன் இறப்புக்கு
நீதி கேட்ட தாய்
அவிநாசி ஒன்றியம், சேவூர் ஊராட்சி, ஒச்சாம்பாளையம் காலனியை சேர்ந்த ஈஸ்வரி, 45. கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்ற இவர், மகன் சிம்புவின் படத்தை வைத்துக்கொண்டு, மகனின் இறப்புக்கு காரணமான செவிலியர், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரை சமாதானப்படுத்திய போலீசார், குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்கச் செய்தனர்.