/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறப்பு திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள்; நடவடிக்கை இல்லாமல் அதிருப்தி
/
சிறப்பு திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள்; நடவடிக்கை இல்லாமல் அதிருப்தி
சிறப்பு திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள்; நடவடிக்கை இல்லாமல் அதிருப்தி
சிறப்பு திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள்; நடவடிக்கை இல்லாமல் அதிருப்தி
ADDED : ஜூலை 20, 2025 10:36 PM
உடுமலை; அனைத்து கிராம வேளாண் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ், பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழக அரசு வேளாண்மை சார்ந்த கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு 'கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி', திட்டத்தை செயல்படுத்தியது.
திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக கடந்த, 2022ல், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை வாரியம், வேளாண் பொறியியல் துறை, மின்வாரியம், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, கிராமங்களில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
ஒரு வட்டாரத்துக்கு ஒரு ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு, அக்கிராமத்தில், ஆலோசனை கூட்டம் நடத்தி, விவசாயிகளிடமும், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினரிடமும் கோரிக்கை குறித்த தீர்மானங்கள் பெறப்பட்டது.
இதில், வேளாண் சார்ந்த கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனவே, திட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவு இருந்தது.
ஆனால், திட்டம் செயல்படுத்தப்பட்டு, இரண்டு ஆண்டுகளாகியும், பெரும்பாலான கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாமல், விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
குறிப்பாக, குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள பெரும்பாலான கிராமங்களில், புதிதாக உலர் களம் தானிய சேமிப்பு கிடங்கு அமைத்தல், வடிகால் வசதி மற்றும் கிராம நீராதாரங்களில் மேம்பாட்டு பணிகள் செய்ய விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றி, சமர்ப்பித்தனர்.
பாசன கால்வாய்கள் சீரமைப்பு, தடுப்பணைகள் ஏற்படுத்துதல் போன்ற கோரிக்கைகளும் கண்டுகொள்ளப்படவில்லை. தீர்மானங்கள் அடிப்படையில் எவ்வித பணிகளும், அரசுத்துறைகளால் மேற்கொள்ளப்படவில்லை.
அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே செயல்படுத்தப்பட்ட, இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளனர்.