/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வலையில் சிக்கிய புறாக்களுக்கு 'விடுதலை'
/
வலையில் சிக்கிய புறாக்களுக்கு 'விடுதலை'
ADDED : ஆக 17, 2025 11:52 PM
திருப்பூர்; திருப்பூர் அருகே, வலை விரித்து பிடிக்கப்பட்ட புறாக்களை, 'பனை காக்கும் நண்பர்கள்' குழுவினர் மீட்டு விடுவித்தனர்.
நேற்று காலை, திருப்பூர் அடுத்த வஞ்சிபாளையம் அருகே கவுசிகா நதி அருகே, 'பனை காக்கும் நண்பர்கள்' குழுவினர் பனை விதைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வறண்ட நிலப்பகுதியில், வலை விரித்து வைக்கப்பட்டு, அதில் சில புறாக்கள் இருப்பது தெரிந்தது.
அங்கிருந்த திருப்பூர் பகுதியைச் சேர்ந்த மூன்று பேர், இது போல் 30க்கும் மேற்பட்ட புறாக்களை வலை விரித்து பிடித்து சாக்கு மூட்டையில் வைத்திருந்தது தெரிந்தது.
அந்த அமைப்பினர், திருப்பூரைச் சேர்ந்த பறவை ஆர்வலர் கீதா மணியை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். புறா வேட்டையில் ஈடுபட்டோருடன் மொபைல் போனில் பேசிய அவர், 'இது ஒரு குற்றச் செயல்; வனத்துறையில் தெரிவித்தால் அபராதம் மற்றும் நடவடிக்கை பாயும்; எனவே, புறாக்களை ஒன்றுவிடாமல் பறக்கவிடும்படி செய்யுங்கள்' என்று தெரிவித்தார்.
இதையடுத்து அவர்களிடமிருந்த புறாக்களை பனை காக்கும் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த முருகேஷ், குரு கிருஷ்ணராஜ், சுரேஷ், தர்ஷித் ஆகியோர் மீட்டு பறக்க விட்டனர். வலையும் பறிமுதல் செய்யப்பட்டது. வனத்துறைக்கும் தெரிவிக்கப்பட்டது.
திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வரும் அந்நபர்கள், புறா கறி உடல் நலத்திற்கு நல்லது என யாரோ கூறியதையடுத்து இதில் ஈடுபட்டது தெரிந்தது.