குமார் நகரில் குழாய் பதிப்பு பணி நிறைவு: அவிநாசி ரோட்டில் விரைவில் போக்குவரத்து
குமார் நகரில் குழாய் பதிப்பு பணி நிறைவு: அவிநாசி ரோட்டில் விரைவில் போக்குவரத்து
UPDATED : ஜூலை 16, 2026 08:33 PM
ADDED : ஜூலை 16, 2026 08:10 PM

திருப்பூர்: அவிநாசி ரோடு குமார் நகரில் குடிநீர் குழாய் பதிப்பு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. விரைவில் இந்த ரோடு வாகனப் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என தெரிகிறது.
திருப்பூர் மாநகராட்சியின் குடிநீர் திட்ட்டத்தில், அவிநாசி ரோடு, குமார் நகர் பகுதியில் பிரமாண்டமான மேல்நிலை மற்றும் தரை மட்டத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து, நான்கு பிரிவாக குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக அவிநாசி ரோடு, என்.எச். ரோட்டில், 650 மீ., நீளத்துக்கு பிரதான குழாய்கள் மாற்றி அமைத்து அதில் இந்த நான்கு பகுதிகளுக்கும் பிரிவுக்குழாய்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இப்பணி கடந்த மாதம், 20ம் தேதி அறிவிக்கப்பட்டு, ஜூலை 10ல் நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டது. இதற்காக, அவிநாசி ரோட்டில், குமரானந்தபுரம் ரோடு பிரியும் இடத்திலிருந்து குமார் நகர் தண்ணீர் தொட்டி வளாகம் வரையில் ரோடு வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டு, 60 அடி ரோடு, பி.என். ரோடு வழியே மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்கின்றன.
குழாய் பதிப்பு பணி ஜூலை 15 ல் நிறைவடைந்தது. தற்போது, குழாய் பதிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், குமரானந்தபுரம் ரோட்டில் குழாய் இணைப்பு பணி தற்போது தான் துவங்கியுள்ளது. இன்னும் இரண்டொரு நாளில் இணைப்பு பணி முடிந்து, சோதனையோட்டம் நடத்தப்படும். அதன்பின், ரோடு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, அவிநாசி ரோட்டில் போக்குவரத்து அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
