UPDATED : ஜூலை 16, 2026 08:22 PM
ADDED : ஜூலை 16, 2026 08:00 PM
பல்லடம்:பல்லடம் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய புறவழிச்சாலை திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. பல்லடம்-செட்டிபாளையம் சாலையில் இருந்து மாதப்பூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் திட்டத்தை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்திருந்தது.
ஆனால், செட்டிபாளையம் சாலையுடன் இணையும் பகுதியில் உள்ள 8 சென்ட் நிலம் தொடர்பான வழக்கு காரணமாக பணிகளில் தடை ஏற்பட்டது. இதனுடன், சட்டசபை தேர்தல் மற்றும் கோடைக்கால நீதிமன்ற விடுமுறை காரணமாக வழக்கு விசாரணையும் தாமதமானது. கடந்த மாதம் நீதிமன்றம் நெடுஞ்சாலைத்துறைக்கு சாதகமாக தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து பணிகள் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், தற்போது வரை பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதால் தொழில்துறையினரும் பொதுமக்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தொழில்துறையினர் கூறியதாவது:
பல்லடத்துக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பசுமைவழிச் சாலை திட்டமும், காளிவேலம்பட்டி பிரிவு-மாதப்பூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் திட்டமும் பல்வேறு காரணங்களால் தாமதமானது. அதன்பின், புதிய புறவழிச்சாலை திட்டம் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், இதுவும் தாமதமாகி வருகிறது. பல்லடம் தொழில் வளர்ச்சிக்கும், சரக்கு போக்குவரத்துக்கும் புறவழிச்சாலை மிகவும் அவசியம். எனவே, பணிகளை விரைவுபடுத்தி திட்டத்தை விரைந்து நிறைவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
