/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடைநிற்றலுக்கு இடம்கொடேல்! மாணவர்கள் கல்வியை தொடர களம் இறங்கிய அதிகாரிகள்
/
இடைநிற்றலுக்கு இடம்கொடேல்! மாணவர்கள் கல்வியை தொடர களம் இறங்கிய அதிகாரிகள்
இடைநிற்றலுக்கு இடம்கொடேல்! மாணவர்கள் கல்வியை தொடர களம் இறங்கிய அதிகாரிகள்
இடைநிற்றலுக்கு இடம்கொடேல்! மாணவர்கள் கல்வியை தொடர களம் இறங்கிய அதிகாரிகள்
ADDED : பிப் 18, 2025 11:59 PM

மேலோட்டமாக பார்க்கும்போது பெரிதாகத் தோன்றாது; புள்ளிவிவரமாக பார்க்கும்போது விஷயம் மனதை உறுத்தும்; திருப்பூர் மாவட்டத்தில் ஆறு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியர் 2,470 பேர் நீண்ட காலமாக பள்ளிக்கு வராதது கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களைப் பள்ளிக்கு மீண்டும் வரச்செய்யவும், இடைநிற்றலைத் தவிர்க்கவும், கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இதற்காக ஒருங்கிணைந்த கல்வித்திட்ட ஆசிரியர் பயிற்றுனர்களும், கல்வித்துறை அதிகாரிகளும் களமிறங்கியுள்ளனர்.
பொதுத்தேர்வு துவங்குகிறது
பிளஸ் 2வுக்கு மார்ச் 3ம் தேதியும், பிளஸ் 1க்கு, மார்ச் 5ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு மார்ச் 28ம் தேதியும் பொதுத்தேர்வுகள் துவங்குகின்றன. திருப்பூர் மாவட்டத்தில், 25 ஆயிரத்து 863 மாணவ, மாணவியர் பிளஸ் 2 பொதுத்தேர்வும்; 27 ஆயிரத்து 237 பேர் பிளஸ் 1 பொதுத்தேர்வும்; 30 ஆயிரத்து 235 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் எழுத உள்ளனர்.
மாணவர் பட்டியல் தயாரிப்பு
பொதுத்தேர்வுகளில் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் முனைப்பு காட்டிவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அரையாண்டுத்தேர்வுக்கு 'ஆப்சென்ட்' ஆன மாணவர்கள், தோல்வி அடைந்த மாணவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி பெறாதோர் மீது கவனம்
திருப்பூர் கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 மாணவ, மாணவியர் 520 பேர், அரையாண்டு தேர்வு எழுதாததும்; 117 பேர், தேர்ச்சி பெறாததும் தெரியவந்துள்ளது. அம்மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்தி, சிறப்பு பயிற்சிகள் அளித்து, பொதுத்தேர்வில் வெற்றிபெறச்செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரிய பயிற்றுனருடன் ஆலோசனை
மாவட்டத்தில், பள்ளி இடைநிற்றல் சாத்தியமுள்ள மாணவர்கள் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நேற்று, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஒருங்கிணைந்த கல்வித்திட்ட ஆசிரிய பயிற்றுனர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் தலைமை வகித்தார்.
கடந்த 2023, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில், மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 2,470 மாணவ, மாணவியர் அதிக நாட்கள் தொடர்ந்து பள்ளிக்கு வராதது தெரியவந்துள்ளது. பத்தாம் வகுப்பில், 348 பேர்; பிளஸ் 1ல், 216 பேர்; பிளஸ் 2வில் 185 பேர் தொடர் விடுப்பில் உள்ளதாகவும் ஆய்வுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இடைநிற்றல் சாத்தியமுள்ள மாணவர்களை, கண்டறிந்து, கல்வியை தொடரச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள ஆசிரிய பயிற்றுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

