/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் நடத்த திட்டம்
/
சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் நடத்த திட்டம்
ADDED : நவ 23, 2024 05:43 AM

திருப்பூர் : திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
ஆர்.டி.ஓ.,மோகனசுந்தரம் தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளர் கனகராஜ் வரவேற்றார். திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரன், தெற்கு துணை தாசில்தார் கார்த்திக்குமார் முன்னிலை வகித்தனர்.
மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் பொன்னுசாமி:
சின்னாண்டிபாளையத்தில் இருந்து, கே.செட்டிபாளையம் செல்லும் ரோட்டை சீரமைக்க வேண்டும். ஆண்டிபாளையம் வி.ஏ.ஓ., ஆபீசுக்கு உதவியாளர் நியமிக்க வேண்டும். வீரபாண்டி உபகோட்டத்துக்கு உட்பட்ட பிரிவு அலுவலகங்களில், உதவி மின் பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
மூன்று உதவி பொறியாளர், 12 அலுவலகங்களின் பணிகளை கவனித்து வருகின்றனர். சேவை தடையின்றி, விரைவாக கிடைக்க ஏதுவாக, மின் பொறியாளர் காலியிடங்களை நிரப்ப வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க, வடக்கு ஒன்றிய குழு செயலாளர் அப்புசாமி:
பரமசிவம்பாளையம் மடைக்காடு பகுதியில், ரோடு மிகத்தாழ்வாக உள்ளதால், மழைநீர் அதிகம் தேங்கி, போக்குவரத்து பாதிக்கிறது. அந்த இடத்தில், சிறுபாலம் அமைக்க வேண்டும்.
காளம்பாளையம் ரேஷன் கடை பழுதாகி விட்டதால், புதிய கட்டடம் கட்ட வேண்டும். வேலை உறுதி திட்டத்தில், புதிய ரேஷன் கடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருநாய்களால், ஆடு, மாடுகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன; பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநகர செயலாளர் ரமேஷ்குமார்:
சுங்கச்சாவடி அமைக்கும் அமைதி பேச்சுவார்த்தையில் கூறியது போல், காய்கறி வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்க கூடாது; உள்ளூர் வாகனங்களுக்கும் சுங்கவரி வசூலிக்க கூடாது. நேற்று நள்ளிரவில், வரி வசூலித்துள்ளனர். இதனால், மறியல் நடந்தது.
சந்தைக்கு செல்லும் காய்கறி வாகனங்களுக்கு சுங்கம் வசூலித்தால், காய்கறி வாகனங்களில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு, அங்கேயே காய்கறி வியாபாரம் செய்வோம். கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தும் அளவுக்கு, தெருநாய்களால் ஆடுகள் பலியாவதை தடுக்கவில்லை.
விவசாயி கிருஷ்ணசாமி:
வேலம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில், ஆக்கிரமிப்பில் உள்ள குளத்தை மீட்க வேண்டும்; அங்கு மீண்டும் குளம் உருவாக்கப்பட வேண்டும். சுற்றுப்பகுதியில் உள்ள ஐந்து கிராம மக்கள் மற்றும் காய்கறி வாகனங்கள் சென்றுவர, சுங்க கட்டண சலுகையை அளிக்க வேண்டும்.
மாநகராட்சி 55 வது வார்டு, 'ஜி' வார்டு, பிளாக் -76 ல், மனை பிரிக்கும் போது, சமுதாயக்கூடம் கட்ட ரிசர்வ் சைட் ஒதுக்கப்பட்டது; அதில் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
நஞ்சராயன் குளம் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி கிருஷ்ணசாமி:
எஸ்.பெரியபாளையம் பகுதியில், சிறு தடுப்பணைகள் தகர்க்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போலீசில் புகார் சொன்னாலும், பொதுப்பணித்துறை புகார் அளிக்க வேண்டும் என்கின்றனர். பொதுப்பணித்துறையினர், நீர்நிலை கட்டமைப்பு தகர்க்கப்படுவதை கண்டுகொள்வதில்லை.
விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த, ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம் பேசுகையில், ''விவசாயிகளின் மனுக்களை, அந்தந்த துறை அலுவலர்கள் பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; அடுத்த மாதத்துக்குள், மனுவின் மீதான நடவடிக்கை குறித்து பதில் கடிதம் அனுப்ப வேண்டும்,'' என்றார்.