/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நஞ்சராயன் குளத்தில் ஆகாயத்தாமரை அகற்ற திட்டம்
/
நஞ்சராயன் குளத்தில் ஆகாயத்தாமரை அகற்ற திட்டம்
ADDED : ஜூன் 13, 2025 10:50 PM

திருப்பூர்; திருப்பூர், நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில், ஆகாயத்தாமரை படர்ந்து வளர்ந்துள்ள நிலையில், அவற்றை அப்புறப்படுத்த, நீர்மட்டத்தை வனத்துறை குறைத்துள்ளது.
திருப்பூரில் உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயம், 440 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு, 146 வகை உள்நாடு, 43 வகை வெளிநாட்டு பறவைகள் என, 189 வகை பறவையினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கடந்த, 2022ல், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. நீர்வாழ் பறவைகளின் வாழ்விடங்களை பாதுகாக்க வழங்கப்படும் உலகளாவிய அங்கீகாரமான, 'ராம்சர்' அங்கீகாரமும், கடந்தாண்டு ஆக., மாதம் இக்குளத்துக்கு வழங்கப்பட்டது.
பொதுவாக, அக்., முதல் டிச., மாதம் வரை குளிர்காலத்தில், இக்குளத்துக்கு ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது வழக்கம். குளத்துக்கு நல்லாறு வழியாக வரும் நீரும், மழைநீரும் தான் ஆதாரம். கடந்தாண்டுகளில் பெய்த தொடர் மழையால் குளத்தில் நீர் நிரம்பி ததும்புகிறது; அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்திலும், நீர் நிரப்பப்படுகிறது.
ஆகாயத்தாமரைகள் 'ஆக்கிரமிப்பு'
இருப்பினும் குளத்தின் சில பகுதி, ஆகாயத்தாமரையால் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில், குளத்தின் நீர்மட்டத்தை குறைக்க வனத்துறை ஏற்பாடு செய்திருக்கிறது.
தற்போது சொற்ப அளவு தண்ணீர் மட்டுமே காணப்படுகிறது; கிட்டத்தட்ட தரைதட்டிய நிலையில் தான் குளம் உள்ளது. நீரில் மிதந்த ஆகாயத்தாமரை, தற்போது தரைதட்டியிருக்கிறது.
வனத்துறையினர் கூறுகையில், 'நீர்மட்டம் குறைத்திருப்பதால், ஆகாய தாமரை நிலத்தில் படிந்துள்ளது. அது, நிலத்தில் மக்கிவிடும். அடுத்து நிரப்பப்படும் புதிய நீர், சமச்சீரான உயிர்ச்சூழல் மண்டலம் உருவாக காரணமாக அமையும்; குளத்தின் வளம் மேம்படும்,' என்றனர்.