எவ்வளவோ சோதனைகளை தாண்டி சாதனை படைத்துள்ளோம்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு
எவ்வளவோ சோதனைகளை தாண்டி சாதனை படைத்துள்ளோம்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ADDED : டிச 14, 2025 01:46 PM

தர்மபுரி: எவ்வளவோ தடங்கல், சோதனைகளை எல்லாம் தாண்டி சாதனை படைத்து இருக்க கூடிய, ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தர்மபுரியில் முன்னாள் அமைச்சர் பழனியப்பனின் இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மகளிர் உரிமை தொகை திட்டத்தில், இன்னும் கூட தகுதி உடையவர்கள் சிலர் விடுபட்டு இருந்தால், அவர்கள் உனடியாக கோரிக்கை வைத்தால், நிச்சயமாக வழங்கப்படும் என்ற நம்பிக்கையையும், உறுதி அளிக்கிறேன்.
சாதனை
ஒரு நாட்டின், மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான ஒரு அறிகுறியாக இருக்க கூடிய, ஜிடிபி வளர்ச்சியில் தமிழகம் தான் நம்பர் ஒன் மாநிலமாக உருவாகி இருக்கிறது. இது நாங்கள் வெளியிட்ட அறிக்கை அல்ல. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை. நீங்கள் நினைத்து பாருங்கள். எவ்வளவோ தடங்கல், சோதனைகள். அந்த சோதனைகளை எல்லாம் தாண்டி சாதனை படைத்து இருக்க கூடிய, ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி. இன்னொரு பக்கம் தேர்தல் பணிகள், எஸ்ஐஆர் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
விழிப்புடன்...!
எஸ்ஐஆர் பணிகளில் திமுக எவ்வளவு வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறது. நமது வாக்குரிமையை நாம் காப்பாற்றியாக வேண்டும். இன்னும் விழிப்புடன் வேலை பார்க்க வேண்டும். இப்போது பாதி வேலை மட்டுமே முடிவடைந்துள்ளது. இன்னும் பாதி வேலைகள் இருக்கிறது. தேர்தல் நடந்து, ஓட்டு எண்ணிக்கை முடிந்து ரிசல்ட் அறிவிக்கும் வரைக்கும் நமக்கு வேலை இருக்கிறது. இரண்டு வாரத்தில் டிசம்பர் முடிந்து ஜனவரி 1ம் தேதி வர போகிறது.
7வது முறையாக...!
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கிறது. திமுக அரசின் சாதனைகள் மக்களுக்கு சென்றடைந்திருக்கிறது. எதிரிகள் நம்மை வீழ்த்த முயற்சிக்கும் போது, நாம் ஏமாந்துவிடக் கூடாது. நமது சாதனைகளை வீடு வீடாக சென்று மக்களிடம் கூறி ஓட்டாக மாற்ற வேண்டும். 7வது முறையாக திமுக ஆட்சி உருவாகி உள்ளது என்ற பெருமை நமக்கு வர வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சி தொடர வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

