/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜவுளி ஏற்றுமதியை உயர்த்த திட்டங்கள்
/
ஜவுளி ஏற்றுமதியை உயர்த்த திட்டங்கள்
ADDED : டிச 16, 2024 10:40 PM

திருப்பூர்; ''நாட்டின் ஒட்டுமொத்த ஜவுளி ஏற்றுமதியை உயர்த்த தொழில்நுட்ப ஊக்குவிப்பு மற்றும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது'' என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்( ஏ.இ.பி.சி.,) துணை இயக்குனர் சுந்தர் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட அளவிலான, ஏற்றுமதி மேம்பாட்டு கமிட்டி ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கார்த்திகை வாசன் வரவேற்றார். மாவட்ட தொழில் மையம் சார்பில் செயல்படுத்தும் திட்டங்களை விளக்கினார்.
அரசு மானிய நிர்ணயம், தொழில்கள், தொழில்முனைவோருக்கான கல்வித்தகுதி, அதிகபட்ச மானிய உதவி உள்ளிட்ட விவரங்களை விளக்கி பேசினார். வெளிநாட்டு வர்த்தக பிரிவின் இணை இயக்குனர், முன்னோடி வங்கி அதிகாரி, எம்.எஸ்.எம்.இ., உதவி இயக்குனர் உள்ளிட்டோர் அரசு திட்டங்கள் குறித்து பேசினர்.
ஏ.இ.பி.சி., துணை இயக்குனர் சுந்தர் பேசியதாவது:
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்காக, ஏ.இ.பி.சி., இயங்கி வருகிறது. வெளிநாட்டு வர்த்தகர்களை அழைத்து, அடிக்கடி கண்காட்சி நடத்தப்படுகிறது. வெளிநாடுகளில் நடக்கும் கண்காட்சிகளில், ஏற்றுமதியாளர் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த ஜவுளி ஏற்றுமதி வர்த்தகம், 2.88 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது; வரும், 2030ம் ஆண்டுக்குள், 8.48 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதே, மத்திய அரசின் நோக்கம். அதற்காக, புதிய தொழில்நுட்ப ஊக்குவிப்பும், திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. ஏற்றுமதியாளருக்கான உதவி செய்ய, ஏ.இ.பி.சி., தயாராக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
---
திருப்பூர் மாவட்ட அளவிலான, ஏற்றுமதி மேம்பாட்டு கமிட்டி ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்றோர்.