/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காற்றுத்தடுப்பானுக்கு அகத்தி நட்டு பராமரிப்பு; விவசாயிகளுக்கு நன்மை அதிகம்
/
காற்றுத்தடுப்பானுக்கு அகத்தி நட்டு பராமரிப்பு; விவசாயிகளுக்கு நன்மை அதிகம்
காற்றுத்தடுப்பானுக்கு அகத்தி நட்டு பராமரிப்பு; விவசாயிகளுக்கு நன்மை அதிகம்
காற்றுத்தடுப்பானுக்கு அகத்தி நட்டு பராமரிப்பு; விவசாயிகளுக்கு நன்மை அதிகம்
ADDED : ஆக 20, 2025 09:19 PM

உடுமலை; கீரை சாகுபடி விளைநிலங்களில், காற்றுத்தடுப்பான் மற்றும் பசுந்தாள் உரத்தேவைக்காக வரப்பில், அகத்தி மரங்களை நட்டு பராமரிக்கும் முறையை, உடுமலை வட்டார விவசாயிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், கிணற்றுப்பாசனத்துக்கு, சிறு, குறு விவசாயிகள் காய்கறி மற்றும் கீரை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடி மாதத்தில், இப்பகுதியில், வீசும் அதிவேக காற்று சாகுபடியில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவது வழக்கம்.
இப்பிரச்னைக்கு தீர்வாக வாழை சாகுபடியில், வரப்பு பயிர்கள் பராமரித்து வந்தனர். தற்போது, கீரை சாகுபடி நிலங்களிலும் வரப்பு பயிர்களை பராமரிக்க துவங்கியுள்ளனர்.
உதாரணமாக, கோட்டமங்கலம் பகுதியில் புதினா சாகுபடி செய்துள்ள நிலத்தில், வரப்பில், அகத்தி மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இலைகளை கால்நடைகளுக்கு தீவனமாகவும், அதிக சத்துகளை உடைய அகத்தி பூக்களை விற்பனை செய்வதால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாயும் கிடைக்கிறது.
வேளாண்துறையினர் கூறியதாவது: விளைநிலங்களின் வரப்புகளில் திட்டமிட்டு வளர்க்கப்படும் மரங்களால் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. புரதம் நிறைந்த வாகை, அகத்தி உள்ளிட்ட மரங்களை பராமரிக்கும் போது காற்றுத்தடுப்பானாகவும், கால்நடை தீவனமாகவும் பயன்படுகிறது. இம்மரங்களுடன் பல்வேறு வகையான குத்துச்செடிகளை நட்டு பராமரிப்பதால், அவை உயிர்வேலியாகவும் பயன்படுகிறது.
பயிர்களுக்கு தீமை செய்யும் பூச்சிகளை ஈர்க்கும் வரப்பு பயிர்களை தேர்வு செய்து நடவு செய்தால், பிரதான பயிர்களுக்கு அதிக மருந்து தெளிப்பது தவிர்க்கப்படும். இவ்வாறு, தெரிவித்தனர்.