/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடையில் சின்னவெங்காய சாகுபடி விலையை எதிர்பார்த்து நடவு
/
கோடையில் சின்னவெங்காய சாகுபடி விலையை எதிர்பார்த்து நடவு
கோடையில் சின்னவெங்காய சாகுபடி விலையை எதிர்பார்த்து நடவு
கோடையில் சின்னவெங்காய சாகுபடி விலையை எதிர்பார்த்து நடவு
ADDED : ஏப் 10, 2025 10:09 PM

உடுமலை,; சின்னவெங்காய சாகுபடிக்கு தேவையான நாற்றுகளை உற்பத்தி செய்து, நடவுக்கு உடுமலை வட்டார விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் கிணற்றுப்பாசனத்துக்கு முன்பு, 40 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
அதிக செலவு பிடிக்கும் இச்சாகுபடியில், அறுவடை காலத்தில், விலை வீழ்ச்சியால், விவசாயிகள் தொடர் நஷ்டத்தை சந்தித்தனர். சில ஆண்டுகள் இருப்பு வைத்தும் விலை கிடைக்கவில்லை.இதனால், பெரும்பாலான விவசாயிகள் மாற்றுச்சாகுபடிக்கு செல்ல துவங்கினர்; உள்ளூர் தேவைக்கு கூட பற்றாக்குறை ஏற்பட்டதால், சில சீசன்களில், கிலோ, 100 ரூபாயை சின்ன வெங்காயம் எட்டியது. மேலும், நடவு சீசனில் விதை வெங்காயமும் உச்சத்தை எட்டியதால், விவசாயிகள் திணறினர்.
இப்பிரச்னைக்கு தீர்வாக, நாற்றாங்கால் அமைத்து நாற்று உற்பத்தி செய்த பிறகு விளைநிலங்களில் நடவு செய்கின்றனர்.
இந்த நடைமுறையால், முளைப்புத்திறன் பிரச்னை தவிர்க்கப்படுகிறது; கோடை சீசனில் அதிகளவு பயிர்கள் கருகுவதும் இல்லை.
சிறிய இடைவெளிக்குப்பிறகு இந்தாண்டு, கோடை சீசனில் சின்னவெங்காயம் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
நாற்றாங்காலில் இருந்து நாற்றுகளை பறித்து, நடவு செய்து வருகின்றனர்; தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, சொட்டு நீர் பாசன முறையையும் சின்னவெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர். சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால், வரும் சீசனில் நல்ல விலை கிடைக்கும் எனவும் எதிர்பார்த்துள்ளனர்.

