குட்டையில் ‘பிளாஸ்டிக்’ கழிவு நீராதாரம் பாதிக்கும் அபாயம்
குட்டையில் ‘பிளாஸ்டிக்’ கழிவு நீராதாரம் பாதிக்கும் அபாயம்
UPDATED : நவ 03, 2026 12:00 AM
ADDED : நவ 02, 2026 11:57 PM

பல்லடம்: பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில், குடியிருப்புகளுக்கு மத்தியில் இக்குட்டை அமைந்துள்ளது. புதர் மண்டிக் கிடந்ததால், விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறியிருந்தது. மழைக்காலங்களில் குட்டை நிரம்பும்போது, குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுவதுடன், விஷ ஜந்துக்களும் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தன.
இதையடுத்து, பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையைத் தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன்பு குட்டை துார்வாரப்பட்டு, கரைகளும் உயர்த்தப்பட்டன. பல ஆண்டுகளுக்குப் பின் குட்டை சீரமைக்கப்பட்டதால், மழைநீர் தேங்கி, அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என மக்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த மழையால் குட்டையில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனால், மழைநீருடன் கழிவுநீரும், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்கள், நெகிழிப் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்ட குப்பைகளும் கலந்து தேங்கியுள்ளன. இதனால், நீர்நிலையைத் துாய்மையாகப் பராமரிக்க வேண்டியதன் அவசியம் மீண்டும் எழுந்துள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பின் துார்வாரப்பட்ட குட்டை, மழைநீரைச் சேமிப்பதற்கா அல்லது நகரின் குப்பைகளைக் கொட்டும் இடமாக மாற்றுவதற்கா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. கழிவுநீரும், பிளாஸ்டிக் கழிவுகளும் நீர்நிலையில் கலப்பது சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீரின் தரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, குட்டையில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும், குப்பைகள் கொட்டப்படுவதைத் தவிர்க்கவும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
