/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தட்டும் தானியமும் நிரம்பக் கிடைக்கும்
/
தட்டும் தானியமும் நிரம்பக் கிடைக்கும்
ADDED : அக் 25, 2024 10:37 PM

திருப்பூர் : 'புதிய ரக சோளம், கம்பு பயிர் சாகுபடி வாயிலாக தட்டு, தானியங்களை கூடுதலாக பெற முடியும்' என, வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தாராபுரம், நஞ்சையம்பாளையம் கிராமத்தில், வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் பேசியதாவது:
திருப்பூரில், சோளம் மட்டும், 37 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இருப்பினும், விளைச்சல் எதிர்பார்த்தளவு இல்லை. தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்களான சோளம், கம்பு, ராகி, தினை, கேழ்வரகு, குதிரைவாலி, சாமை போன்றவற்றின் விளைச்சலை பெருக்க, மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் விவசாயிகளுக்கு, பல்வேறு மானிய உதவிகள் வழங்கப்பட்டு, உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உற்பத்திக்கு மானியம்
குறிப்பாக, திருப்பூர் மாவட்டத்தில் சோளம் உற்பத்தியை பெருக்க, விதை உற்பத்தி மற்றும் வினியோகம், நுண்ணுாட்டம், உயிர் உரங்கள், உயிரியல் காரணிகள், உயிரியல் பூச்சி மருந்துகள், செயல் விளக்கத்திடல் உள்ளிட்ட அனைத்து இனங்களிலும் மானியம் வழங்கப்படுகிறது.ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க சோளத்தில், 'கோ 32' என்ற புதிய ரகம், கம்பில் 'கோ 10' என இரு ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவ்வகை ரகங்கள் தட்டு மகசூலுடன், தானிய மகசூலும் கொடுக்க கூடியது.இவ்வாறு, அவர் பேசினார்.பயிற்சியில் புதிய ரகங்கள், கோடை உழவு, ஊட்டமேற்றிய தொழு உரம், உயிர் உரங்கள் மற்றும் நுண்ணுாட்ட உபயோகம், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு ஆகிய தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலர் செல்லமுத்து, உதவி வேளாண்மை அலுவலர் முத்துராஜா ஆகியோர் செய்திருந்தனர்.-
---
தாராபுரம், நஞ்சையம்பாளையம் கிராமத்தில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சியில் பங்கேற்ற தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் உள்ளிட்ட வேளாண் துறையினர்.