/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை ஏற்றுமதி அதிகரிப்பால் மகிழ்ச்சி! புதிய ஆர்டர்கள் சாத்தியமாகின்றன
/
பின்னலாடை ஏற்றுமதி அதிகரிப்பால் மகிழ்ச்சி! புதிய ஆர்டர்கள் சாத்தியமாகின்றன
பின்னலாடை ஏற்றுமதி அதிகரிப்பால் மகிழ்ச்சி! புதிய ஆர்டர்கள் சாத்தியமாகின்றன
பின்னலாடை ஏற்றுமதி அதிகரிப்பால் மகிழ்ச்சி! புதிய ஆர்டர்கள் சாத்தியமாகின்றன
ADDED : பிப் 20, 2025 06:07 AM

திருப்பூர்; திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் வகையில், ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி, ஒரே மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, 13, 900 கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ளது.
கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் 2022, 2023ம் ஆண்டுகளில், ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் சரிவடைந்தது. கடந்த 2024 பிப்., மாதத்தில் இருந்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இயல்பு நிலையை எட்டியது. அதன் பிறகே, மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியது.
இந்தாண்டு ஜன., மாதம் நடந்துள்ள ஏற்றுமதி, நம் நாட்டு ஆயத்த ஆடை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாக நடந்துள்ளது. ஒரே மாதத்தில், 1,606 மில்லியன் டாலர் (13,900 கோடி ரூபாய்)அளவுக்கு, ஏற்றுமதி நடந்துள்ளது; இதில், திருப்பூரின் பங்களிப்பு அதிகம்.
இந்தாண்டை இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான ஆண்டாக மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது; அதனை நிரூபணம் செய்வது போல், முதல் மாதத்தில் நடந்த ஆயத்த ஆடை ஏற்றுமதியே மைல் கல்லாக அமைந்துள்ளது.
இந்தியாவை நோக்கி...
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது:
ஜவுளி இறக்குமதி செய்யும் நாடுகள், சீனா மற்றும் வங்கதேசத்துடன் அதிக வர்த்தகம் செய்து வந்தன; சில ஆண்டுகளாக, புதிதாக இந்தியாவை நோக்கி வந்து கொள்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, ஐரோப்பிய நாடுகளின் பசுமை சார் உற்பத்தி எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய, திருப்பூரால் மட்டுமே இயலும்.
புதிய ஆர்டர்கள்
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள், திருப்பூருக்கு வந்து, உற்பத்தி படிநிலைகளை நேரில் பார்த்து செல்கின்றன. புதிய வர்த்தக நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது; புதிய ஆர்டர்களாகவும் மாறி வருகிறது. இதனால், நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.